ஆர்.கே. நகரில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம்: பி.ஆர் பாண்டியன்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக  பிரசாரம் செய்யவுள்ளோம் என, தமிழக காவிரி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறினார். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக  பிரசாரம் செய்யவுள்ளோம் என, தமிழக காவிரி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறினார். 
நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களைப் பார்வையிட  வெள்ளிக்கிழமை வந்த  அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சியால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு,  மேட்டூர் அணையிலிருந்து தாமதமாக திறக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா பயிர்கள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.  இதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளாக ஆறுகள், வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததுதான். இதனால், மழைநீர் வயல்களிலிருந்து வடிய வழியின்றி பயிர் அழுகியுள்ளது.
தமிழகத்தில் ஒக்கி புயலால் இதுவரை எத்தனை மீனவர்கள் காணாமல் போனார்கள் என்ற விவரத்தை மாநில அரசால் வெளியிடமுடியவில்லை. இறந்த மீனவர்களுக்கு கேரள அரசு ரூ.20 லட்சம் அறிவித்துள்ளது. 
ஆனால், தமிழக அரசு இறந்த மீனவர்களுக்கு காப்பீட்டுடன் சேர்த்து ரூ.10 லட்சம் அறிவித்துள்ளது. இதனால்தான் மீனவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மீனவர்களின் பிரச்னைகளுக்காக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தொடர்ந்து, அனைவரும் இணைந்து ஓர் அமைப்பை உருவாக்கி செயல்படுவது என முடிவு செய்துள்ளோம். சர்க்கரை ஆலைகள்  விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம். காவிரி பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரினால், பெட்ரோலிய ரசாயன மண்டலமாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்தும் வரை விவசாயிகளைத் திரட்டி போராடுவோம். 
தமிழக நலனுக்கு எதிராக அண்டை மாநில அரசியல் லாப நோக்கோடு தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களுக்கு எதிராக அடுத்த வாரம் பிரசாரம் தொடங்கவுள்ளோம் என்றார்.
பேட்டியின்போது, விவசாய சங்க கொள்ளிடம் தலைவர் சிவப்பிரகாசம், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் சீனுவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com