நாகூர் வழியே செல்லும் கச்சா எண்ணெய்க் குழாயை அகற்ற வேண்டும்: இந்திய தேசிய லீக் கோரிக்கை

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திலிருந்து நாகூர் வழியே செல்லும் எண்ணெய்க் குழாயை அகற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின்

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திலிருந்து நாகூர் வழியே செல்லும் எண்ணெய்க் குழாயை அகற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திலிருந்து, நாகூர் அருகே உள்ள பனங்குடி சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக நாகூர் பகுதியில், மக்கள் குடியிருப்புகள் வழியே குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு நாகூர் கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய்க் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு, பெருமளவிலான எண்ணெய் வெளியாகி வழிந்தோடியது நாகூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வசிப்பிடப் பகுதியில் இந்த உடைப்பு ஏற்பட்டிருந்தால் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதே மக்களின் அச்சத்துக்குக் காரணம்.
பூமியில் புதைக்கப்படும் எண்ணெய்க் குழாய்கள் சுமார் 100 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும் தகுதிக் கொண்டவை என்ற நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
எனவே, நாகூரில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய்களின் தரம் குறித்த ஆய்வுக்கும், காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து  நாகூர் குடியிருப்புப் பகுதிகள் வழியே பதிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாயை உடனடியாக அகற்றி, மாற்றுப் பாதையில் குழாய் அமைக்கவும் அரசு உத்தரவிட வேண்டும் என அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com