"விபத்தில்லா தமிழகம் உருவாக சாலை விதிகளை கடைப்பிடிப்பது அவசியம்'

வாகனங்கள் அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் விபத்தில்லா தமிழகம் உருவாக, அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.

வாகனங்கள் அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் விபத்தில்லா தமிழகம் உருவாக, அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.
28-ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தொடங்கிவைத்துப் பேசியது:
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிற இந்த காலகட்டத்தில் விபத்துகளும் பெருகி வருகின்றன. இதை தவிர்க்க ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். பாதசாரிகள் சாலையை கடக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும். அதேபோல், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளைக் கடைப்பிடித்து விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றார் பழனிசாமி.
பேரணியானது புதிய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று விட்டு, மீண்டும் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில் சென்றோர் தலைக்கவசம் உயிர்க் கவசம், மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், மிதவேகம் மிகநன்று, வாகனம் ஓட்டும்போது கைபேசி பேசாதே, சாலை விதிகளை பின்பற்று உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். இதில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள், இருசக்கர வாகன விற்பனை நிலைய முகவர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நாகை மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள் அடங்கிய பேருந்தை திறந்து வைத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணுத் திரைவாகனத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட ஒளிபரப்பை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி. ஜெயபாஸ்கரன், ஆய்வாளர்கள் பி.ஜெய்சங்கர், கை. காஞ்சி, கே. சத்யகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com