நாகை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வடக்கு பால்பண்ணைச்சேரி, புத்தூர் பேருந்து நிறுத்தம், சிக்கல் கடைத்தெரு, பனைமேடு பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. கனகராஜ் தலைமை வகித்து கட்சிக் கொடி ஏற்றினார். இதில் மாவட்ட பொதுச் செயலர் வி. ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் டி. ராமலிங்கம், சிறுபான்மைத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூ நெளஷாத், சிக்கல் காங்கிரஸ் கட்சி தலைவர் உபயதுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளிகளில்...
நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆட்சி மன்றக்குழுத் தலைவர் ஆர்.கே. ரவி, செயலர் கே.எஸ். குமாரவேலு, தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிக்கு உதவித்தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
நாகூர் நகரவை இஸ்லாம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட சிறுபான்மைத்துறை முன்னாள் தலைவர் எம். முகம்மது அப்துல் காதர் தலைமை வகித்தார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் இரா. ரஞ்சிதம், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் ஆர். பிரிதிவிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவுக்கு கல்விக்குழு தலைவர் பி.டி. பகு தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எம். ரவி முன்னிலை வகித்தார். இதில் ஆடிட்டர் ராஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை பாலையூர் கூட்டுறவு சங்க தலைவர் மனோகர் வழங்கினார்.
சீர்காழியில்...
சீர்காழி வாணிவிலாஸ் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 115-ஆவது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சீர்காழியில் பால்சாமி நாடார் கல்வி அறக்கட்டளையின் வாணி விலாஸ் உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா பள்ளி செயலர் மா.இராமர் தலைமையில் நடந்தது. கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எம்.பூவராகன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வி.ஹேமலதா, உதவி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, காமராஜர் மக்கள் நலப்பேரவை மாவட்டத்தலைவர் குருசாமி நாடார், சமூக நலப்பேரவை பொருளாளர் பால்சாமி நாடார், முன்னாள் கவுன்சிலர் இராஜேந்திரன் பங்கேற்றனர். ஆசிரியர் சுந்தரேசன் நன்றி கூறினார்.
இதேபோல் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் குறித்த கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், புத்தகமும் வழங்கப்பட்டன. இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் சம்பத்குமார், வரதராஜன், உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி ஈசானியத்தெருவில் உள்ள காமராஜர் சிலைக்கு நகர தலைவர் லெட்சுமணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர துணைத் தலைவர் பூபாலன், பொறுப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் பகுதியில் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் கா.பழனியப்பன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர்கள் கே.உதயசூரியன், தா.சிவகுருநாதன்,வி.ஜெயபால், பட்டதாரி ஆசிரியர்கள் நி.செல்வராசு, இரா. ஆனந்தராசு, வி.இராணி, கோ.செந்தில்குமார், மா.அய்யாத்துரை உள்ளிட்டோர் பேசினர். விழாவையொட்டி நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.
ஆறுகாட்டுத்துறை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் பி.எஸ்.சேதுபதி தலைமை வகித்தார். பன்னாள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியர் தெ.இராமசாமி தலைமை வகித்தார். இதேபோல, பல்வேறு பள்ளி, கல்வி நிறுவனங்களில் விழா நடைபெற்றது.
குத்தாலத்தில்...
குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியர் ஜி. பரமசிவம் தலைமை வகித்தார். காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் கல்விக்காக செய்த சாதனைகள் குறித்தும் மாணவர்களுக்கிடையே பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர்கள் அன்பழகன், பாலசுப்பிரமணியன், தமிழாசிரியர் ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை நகர காங்கிரஸ் கட்சி சார்பில், கூறைநாட்டில் உள்ள காமராஜர் மாளிகையில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் நகரத் தலைவர் கே. செல்வம் தலைமை வகித்தார். நாகை வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் பி. ஜி. பத்மநாபன், ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை வடக்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜகுமார், காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மயூரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ. ஜெயராஜ், கட்சியின் முன்னாள் நகரத் தலைவர் ஏ.எம். முஸ்தபா உள்ளிட்டோர் காமராஜர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிகளில், கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஆர். கே. கனகசபை, விவசாய அணி நாகை மாவட்டத் தலைவர் சி.லோகநாதன், நகர செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரம் குருஞானசம்பந்தர் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில், தலைமையாசிரியர் ஜி. வெங்கடேசன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் ஆர். சிவபுண்ணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சோம. அண்ணா, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ஏ. நாகராஜன் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கிப் பேசினர். முன்னதாக, காமராஜர் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com