நாகை , கடலூர் மாவட்டங்களில் பெட்ரோ மண்டலம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி

நாகை , கடலூர் மாவட்டங்களில் பெட்ரோ மண்டலம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

நாகை , கடலூர் மாவட்டங்களில் பெட்ரோ மண்டலம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி கூறினார்.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த பூம்புகாரில் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும் "காவிரி காப்போம் பிரசார விழிப்புணர்வு பயணம் நிறைவு நாள் பொதுக்கூட்டம்' தொடர்பாக தருமகுளத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர்,  பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம்  கூறியது:
தமிழகம் தற்போது பல்வேறு சோதனைகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதோடு, காவிரி உரிமையை இழந்து கர்நாடகத்திடம் கையேந்தும்  நிலை ஏற்பட்டுள்ளது.
1924 -ஆம் ஆண்டு சென்னை மாகாணமும்,  மைசூர் சமஸ்தானமும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கர்நாடகம், கண்ணாம்பாடியில் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டியது. அதேபோல், தமிழகத்தில் மேட்டூரில் அணை கட்டிக்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி 50ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதன் விளைவாக தமிழகத்துக்குரிய தண்ணீர்  கிடைக்கவில்லை. நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி 1990 -ஆம் ஆண்டில் 250 டி.எம்.சி. தண்ணீரும், 2007-ஆம் ஆண்டு தீர்ப்பின்படி 192 டி.எம்.சி. தண்ணீரும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டும். ஆனால், நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் வழங்கவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு அநீதி இழைத்துவிட்டது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக சார்பில் "காவிரியை காப்போம் பிரசார விழிப்புணர்வு பயணம்" பாமக மாநில இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான  அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜூலை 28-ஆம் தேதி ஒக்கேனக்கல்லில் தொடங்கி 30-ஆம் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது. கொள்ளிடம் ஆற்றின் வழியாக 30 கி.மீ. தொலைவுக்கு கடல்நீர் உட்புகுந்துவிட்டது.இதனால் குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது. இதைத் தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும்.
நாகை, கடலூர் மாவட்டங்களில் மத்திய அரசு 57ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. விளைநிலங்களை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகளை விவசாயிகளிடம் வழங்காமல் ஆளும் கட்சியினரே செய்வது கண்டிக்கதக்கது என்றார் ஜி.கே. மணி.
அப்போது பாமக மாநில துணை பொதுச் செயலர் பழனிசாமி,  மாநில முன்னாள் பொறுப்பாளர் ஐயப்பன், நாகை வடக்கு மாவட்டச் செயலர்  லண்டன். அன்பழகன், மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com