நாகையில் பள்ளி வாகனங்கள் சோதனை: 10 வாகனங்கள் தகுதியிழப்பு

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வின்போது,  வாகன இயக்கத்துக்குத் தேவையான தகுதிகள் கொண்டிராத 10 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வின்போது,  வாகன இயக்கத்துக்குத் தேவையான தகுதிகள் கொண்டிராத 10 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
நாகை கல்வி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு நாகை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பான்கள், இருக்கைகளின் தரம், புத்தகப்பைகள் வைக்கும் இடங்கள், வாகனத்தின் தளம், படிக்கட்டுகளின் தரம், கதவுகளின் இயக்கம், அவசர வழிக் கதவுகள், ஓட்டுநர் மற்றும் உதவியாளரின் தகுதி, உரிமம் மற்றும் அனுபவம், காப்பீட்டுச் சான்று, மாசுக் கட்டுப்பாட்டு  தரச் சான்று உள்ளிட்டவைகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
நாகை கல்வி மாவட்டத்தில் உள்ள 31 பள்ளிகளுக்குச் சொந்தமான 91 வாகனங்களில் 76 வாகனங்கள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், 66 வாகனங்கள் தகுதியானவை என சான்றளிக்கப்பட்டன. 10 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.
ஆட்சியர் எச்சரிக்கை... ஆய்வுகளுக்குப் பின்னர் ஆட்சியர் தெரிவித்தது: பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் சிறப்பு விதிகளின்படி, நல்ல நிலையில் உள்ள வாகனங்கள் பள்ளி பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்போது 10 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் உள்ள குறைகள் சீர் செய்யப்பட்டு, மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஆய்வுக்கு உள்படுத்தப்படும்போது, தகுதியிருப்பின் சான்று வழங்கப்படும்.
பள்ளி வாகனங்களை இயக்கும்போது, வாகன ஓட்டுநர்கள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தினால், அந்த வாகன ஓட்டுநரின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களை பள்ளி வாகன ஓட்டுநர்களாக கண்டிப்பாக நியமிக்கக் கூடாது. பள்ளிப் பணிக்கு வாடகை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் தர ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். ஆட்டோக்களில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், வருவாய்க் கோட்டாட்சியர் சி. கண்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏ. முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் பி. ஜெயசங்கர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com