சீர்காழியில் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள்

சீர்காழி அரசு போக்குவரத்து கழக நடத்துநரை, சீர்காழி காவல் நிலையத்திற்கு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதை அடுத்து சக ஊழியர்கள்

சீர்காழி அரசு போக்குவரத்து கழக நடத்துநரை, சீர்காழி காவல் நிலையத்திற்கு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதை அடுத்து சக ஊழியர்கள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜா (48). இவர் சீர்காழி அரசு கிளை போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிகிறார். இவர் அதிமுக அண்ணா தொழிற்சங்க உறுப்பினராகவும் உள்ளார்.
கடந்த வாரம் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சீர்காழி அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் முத்துராஜாவும் பங்கேற்று பணிக்கு வரவில்லையாம். இதனால் சக அதிமுக தொழிற்சங்க
நிர்வாகிகள் முத்துராஜா வீட்டுக்குச் சென்று பணிக்குத் திரும்ப வலியுறுத்தினராம். ஆனால்
முத்துராஜா மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பணிக்காக கிளை போக்குவரத்துக் கழகத்துக்கு
முத்துராஜா வந்தபோது, சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் அழகுதுரை மற்றும் போலீசார் அவர் மீது புகார் வந்துள்ளதாகக் கூறி சீர்காழி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளை சீர்காழி பேருந்து நிலையம், கிளை போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் பயணிகளோடு நிறுத்தினர்.
அவர்கள் அனைவரும் முத்துராஜாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி சீர்காழி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த காவல் நிலையப் போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். முத்துராஜா விசாரணைக்காக மட்டுமே அழைத்து வரப்பட்டதாகவும், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனவும் காவல் நிலைய ஆய்வாளர் அழகுதுரை கூறினார்.
இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் கிளை போக்குவரத்து கழக அலுவலகத்திற்குச் சென்று அதிமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
முத்துராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டாலோ போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இப்போராட்டம் காரணமாக சுமார் 3 மணி நேரம் சீர்காழியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com