திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் வீதியுலா

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சீர்காழியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாங்கூர் கிராமம். சைவ, வைணவ கோயில்கள் அதிகம் கொண்டுள்ள ஆன்மிகத் தலமான இவ்வூரைச் சுற்றி 11 திவ்ய தேச பெருமாள் கோயில்களும், 12 பிரசித்தி பெற்ற சிவாலயங்களும் உள்ளன.  
திருநாங்கூரில் மதங்காஸ்ரமத்தில் மதங்க ரிஷி தவம் செய்யும்போது பார்வதி தேவி பெண்ணாக அவதரித்து பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு, மதங்க ரிஷிக்கு திருமணக் கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு நடைபெற்றதாகவும், அதைத் தொடர்ந்து 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா நடைபெற்றதாகவும் வரலாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன. 130 ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2-ஆவது ஆண்டாக இந்த ஐதீக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  திருநாங்கூர் ஸ்ரீ அஞ்சனாசு சமேத ஸ்ரீ மதங்கீசுவர சுவாமி, திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்யேசுவர சுவாமி, திருயோகீசுவரம் ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீசுவர சுவாமி, திருநாங்கூர் ஸ்ரீசந்திராசு அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு ஸ்ரீ நற்றுணை நாயகி சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ நம்பிற்பிரியாள் சமேத ஸ்ரீ நம்புவார்கன்யசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி, திருமேனிக்கூடம் ஸ்ரீ செளந்தரநாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவர சுவாமி, பெருந்தோட்டம் ஸ்ரீ அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஸ்ரீ ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை ஸ்ரீ சுந்தர நாயகி சமேத ஸ்ரீ கலக்காமேசுவர சுவாமி, நயினிபுரம் ஸ்ரீ நளினாம்பிகா சமேத ஸ்ரீ நயனவரதேசுவர சுவாமி ஆகிய 12 சிவபெருமான்கள் வீதியுலா வந்து நாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை எழுந்தருளினர்.
சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், 12 சுவாமி -அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து சுவாமி - அம்பாள்  திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
பின்னர், வேதபாராயாணம், திருமுறைபாராயணம், கைலாயவாத்தியங்கள், பஞ்சவாத்தியங்கள், நாகசுவர இன்னிசை கச்சேரியுடன் வாணவேடிக்கைகள் முழங்க 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com