மழை பாதிப்பு: வேதாரண்யம் அருகே ஆபத்தான நிலையில் படகுப் பயணம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மழை வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இயக்கப்படும்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மழை வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இயக்கப்படும் மீன்பிடிப் படகில் அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்வது ஆபத்தானது என எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள், கூடுதல் எண்ணிக்கையில் படகுகளை இயக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வண்டல், குண்டூரான்வெளி, பழையாற்றங்கரை உள்ளிட்ட கிராமங்களைச் சூழ்ந்துள்ளது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் இந்த கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு தீவுபோல காட்சியளிக்கிறது.
இதையடுத்து, அவுரிக்காடு கிராமத்தில் இருந்து அடப்பாறு மற்றும் நல்லாற்றின் குறுக்கே வண்டல், குண்டூரான்வெளி கிராமங்களுக்கு நவ. 5 -ஆம் தேதி முதல் ஒரு மீன்பிடிப் படகும், வயல்வெளி வழியாக தலைஞாயிறுக்கு மற்றொரு படகும் கிராம மக்களின் போக்குவரத்துக்காக இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, நவ. 8 -ஆம் தேதி முதல் பழையாற்றங்கரை கிராமத்தில் இருந்து பிரதான சாலை பகுதிக்கும் ஒரு படகு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த படகுகள் மூலம் கிராமத்தினர் வெளியிடங்களுக்குச் செல்லவும், கூலி வேலைகளுக்குச் செல்லவும் பயணித்து வந்தனர்.
இங்குள்ள பள்ளி மாணவர்கள்100-க்கும் மேற்பட்டோர் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்களில் செயல்படும் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டதால் கல்லூரிகளுக்குச் செல்லும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிராம மக்களோடு பயணித்து வந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் வெளியூர்களுக்குச் செல்லும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஒரு கண்ணாடி இழைப் படகில் ஒரு தடவைக்கு பொதுமக்கள், மாணவ, மாணவியர் என 30-க்கும் மேற்பட்டோர் பயணிக்க நேரிடுகிறது.
சுமார் 8 அடி முதல் 10 அடி ஆழம் உள்ள அடப்பாறு, நல்லாறு என கடலுக்குச் செல்லும் இரு வடிகால் ஆறுகளின் குறுக்கே பள்ளிச் சிறுவர்களை அதிக எண்ணிக்கையில் படகில் பயணிக்கச் செய்வது ஆபத்தானது என்பதை சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
தேவைகளின் அவசியம் கருதியும், வெள்ளம் வடியாததைக் கருத்தில் கொண்டும் கூடுதல் எண்ணிக்கையில் படகுகளை இயக்கவும், அதில் குறிப்பிட்ட  எண்ணிக்கையிலானவர்களை மட்டும் அனுமதிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாகும்.
வண்டல், குண்டூரான்வெளி கிராமங்களைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நாகக்குடையான்  அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கடந்த 2009 -ஆம் ஆண்டு குளத்துக்குள் பள்ளி வேன் கவிழ்ந்து நேர்ந்த விபத்தில் உயிரிழந்த ஆசிரியை உள்ளிட்ட  மாணவர்கள்10 பேரும் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த கிராமத்தினர் சோகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com