தனியார் வாகன ஓட்டுநர் 2 குழந்தைகளுடன் தற்கொலை

நாகை மாவட்டம், கீழையூரைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர், தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை மாலை தெரியவந்தது.

நாகை மாவட்டம், கீழையூரைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர், தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை மாலை தெரியவந்தது.
நாகை, கிழக்குக் கடற்கரை சாலையில் ஏற்கெனவே மதுபானக் கடை செயல்பட்டு வந்த ஒரு கட்டடம் தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அந்தக் கட்டடத்திலிருந்து  கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் செவ்வாய்க்கிழமை மாலை கட்டடத்தின் மேல் தளத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஒரு ஆண் மற்றும் 2 குழந்தைகளின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த நாகை நகர காவல் நிலைய போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்டனர். அழுகிய நிலையிலிருந்த அந்தச் சடலங்கள், யாருடையவை என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, நாகை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன், வருவாய்க் கோட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் நிகழ்விடத்துக்கு சென்று, சடலங்களை அப்புறப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அடையாளம் தெரிந்தது...
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்,  குழந்தைகளுடன் இறந்து கிடந்தவர், நாகை மாவட்டம், கீழையூர் காவல் சரகம், விழுந்தமாவடி அருகே உள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்த தனியார் கனரக வாகன ஓட்டுநர் ப. தர்மராஜன்(27) என்பதும், அருகில் கிடந்த சடலங்கள் அவருடைய குழந்தைகளின் சடலம் என்பதும் தெரியவந்தது.
தர்மராஜனின் மனைவி கவிதா உடல் நலக் கோளாறு காரணமாக புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்ட விரக்தியில், தர்மராஜன் தனது குழந்தைகள் தருண்(5), ரஜீத்(3) ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தர்மராஜன் மற்றும் அவரது குழந்தைகள் இறந்து கிடந்த கட்டடத்தின் அருகே கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அந்த வாகனம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு, நாகை நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அந்த வாகனம் தர்மராஜனுடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நாகை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காணவில்லை வழக்கு...
கடந்த 9-ஆம் தேதி முதல் தர்மராஜன் தனது குழந்தைகளுடன் மாயமான நிலையில், தர்மராஜன் மற்றும் அவரது குழந்தைகளைக் காணவில்லை என அவரது சகோதரர் சிவராஜன் கீழையூர் காவல் நிலையத்தில் கடந்த 11-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், கீழையூர் காவல் நிலையத்தில் காணவில்லை பிரிவில் (மேன் மிஸ்ஸிங்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com