நாகையில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் சாவு

நாகையில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரிட்ட வெடி விபத்தில், பெண் தொழிலாளர் உயிரிழந்தார்.

நாகையில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரிட்ட வெடி விபத்தில், பெண் தொழிலாளர் உயிரிழந்தார்.
நாகை, வடகுடி சாலையில், உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை, நாகை வாணக்காரத் தெருவைச் சேர்ந்த செளந்தரவள்ளி என்பவருக்குச் சொந்தமானது.  சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்தப் பட்டாசு ஆலையில், திருவிழா,  திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்குப் பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெறும் எனவும், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 4.10 மணிக்கு இந்தப் பட்டாசு ஆலையில் பலத்த சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. ஏராளமான வெடிகளும், வெடி மருந்துகளும் இருந்ததன் காரணமாக, தொடர்ந்து 10 நிமிடத்துக்கும் மேலாக வெடி சப்தம் நீடித்துள்ளது. இதைத் தொடர்ந்து,  பெரும் தீ பரவியது. இந்த விபத்தில், சுமார் 600 சதுர அடி பரப்பில் அமைந்திருந்த பட்டாசு ஆலை முழுவதும் வெடித்து சிதறியது. மேற்கூரை மற்றும் சுவர்கள் உடைந்து சிதறின.
இதுகுறித்து தகவலறிந்த  நாகை தீயணைப்பு மீட்புப் படையினர் 2 தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீ மேலும் பரவாமல் தடுத்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பட்டாசு ஆலையினுள் ஆலை தொழிலாளர் நாகை, நரியாங்குடியைச் சேர்ந்த மு. நாகம்மாள்(52) உடல் கருகி இறந்து கிடந்தது தெரியவந்தது.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலைக்குச் சென்று, அதன் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார். நாகூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையிலான போலீஸார், நாகம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பட்டாசு ஆலைக்கு சீல்... இந்தப் பட்டாசு ஆலையில் தற்போது நேரிட்டுள்ள விபத்து 3-ஆவது முறையாக நிகழ்ந்த விபத்து ஆகும். ஏற்கெனவே 1988-ஆம் ஆண்டிலும், 2009-ஆம் ஆண்டிலும் இந்தப் பட்டாசு ஆலையில் விபத்துகள் நேரிட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை வெடி விபத்து நேரிட்டதைத் தொடர்ந்து, பட்டாசு ஆலையை மூடி சீல் வைக்க நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில், நாகை வட்டாட்சியர் எஸ். ராகவன் தலைமையிலான அலுவலர்கள்
சென்று, பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர்.
டி.ஆர்.ஓ. விசராணைக்கு உத்தரவு... பட்டாசு ஆலை வெடி விபத்துத் தொடர்பாக,  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன் விசாரணை நடத்தி, ஒரு மாத காலத்தில் அறிக்கைத் தாக்க செய்ய மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com