தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்: தருமையாதீனம் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்

மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், சிவனருள், மயிலாடுதுறை விவேகானந்தர் பேரவை ஆகியவை இணைந்து இம்முகாமை  நடத்தின. கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. சுவாமிநாதன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்காக, தருமையாதீன திருமடத்தில் எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருகமா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் ஸ்ரீ சொக்கநாதர் பெருமானுக்கும், ஸ்ரீ திருஞானசம்பந்தர் பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்து மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் தனது ஆசியுரையில் கூறியது: மாணவர்கள் வீட்டையும், நாட்டையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரி வளாகத்தில் குப்பைகள் இல்லாமலும், தண்ணீர் தேங்காமலும், நல்ல தண்ணீரில் ஏடிஸ் வகை கொசுக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைவரும் நிலவேம்பு குடிநீரை பருக வேண்டும். மேலும், அருள்மிகு தையல் நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் ஜீவரஹரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, ரசம் சாதம் நிவேதனம் செய்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
திருஞானசம்பந்தரின் திருச்செங்கோட்டங்குடி திருப்பதிகத்தை பாராயணம் செய்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும் என்றார்.
நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்  பங்கேற்று, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.
முகாமில் 2,700 மாணவ, மாணவியர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவேகானந்தர் பேரவையின் தலைவர் நாஞ்சில் ஆர். பாலு,  நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com