நாகையில் விநாயகர் கோயில் இடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published on : 16th April 2018 09:20 AM | அ+அ அ- |
நாகை, காடம்பாடி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வருவாய்த்துறை அலுவலர்களால் இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகை, காடம்பாடி சொக்கநாதர் கோயில் தெருவில் உள்ள நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர் அலுவலகம் அருகே வீரசொக்கநாத விநாயகர் கோயில் அமைக்கும் பணி, அப்பகுதி இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது எனவும், அங்கு கோயில் கட்டக் கூடாது எனவும் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 60 சதவீதத்துக்கும் அதிகமாகக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாகை வட்டாட்சியர் ராகவன் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அக்கோயிலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காடம்பாடி பப்ளிக் ஆபீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் வட்டாட்சியர் ராகவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கோயில் கட்டுவதற்கு வேறு இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.