கொள்ளிடம் பகுதியில் நூதன முறையில் மரங்கள் திருட்டு

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் உள்ள மரங்களை நூதன முறையில் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் உள்ள மரங்களை நூதன முறையில் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையோரத்தில் அளக்குடி கிராமத்திலிருந்து பனங்காட்டான்குடி வரை சுமார் 18 கி.மீ., தொலைவுக்கு புளியமரம், மாமரம் மற்றும் தூங்குமூஞ்சி மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் அனைத்தும் 50ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை என்பதால், நன்கு பருத்துக் காணப்படுகின்றன.
இதேபோல், கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாகத் திகழும் தெற்கு ராஜன் வாய்க்கால்,புதுமண்ணியா, பொறைவாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால் கரைகளிலும் விலைமதிப்பு மிக்க மரங்கள் வளர்ந்து பழைமையை வெளிப்படுத்துகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பல மரங்கள் கருகி முறிந்து விழும் நிலையில் காட்சியளிக்கின்றன. முறிந்து கீழே விழுந்த சில மரங்கள், மர்ம நபர்களால் இரவோடு இரவாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் ஆய்வு நடத்தியதில், ஓர் அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது, நன்கு வளர்ந்த மரங்களின் அடிப்பகுதியையோ அல்லது மரக்கிளையையோ மர்ம நபர்கள் இரவு நேரங்களில் இயந்திரவாள் கொண்டு 80 சதவீத அளவுக்கு அறுத்துவிட்டுச் செல்கின்றனர். சில மரங்களின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள இடைவெளிப் பகுதியில், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டுச் சென்று விடுகின்றனர். இதன்மூலம் மரங்கள் 20 முதல் 30 நாள்களுக்குள் கருகிப்போய் முறிந்து  விடுகின்றன. 
விழும் நிலையில் உள்ள மரங்களை எளிதில் கீழே சாய்த்து, அபகரித்துச் சென்று விற்பனை செய்துவிடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
எனவே, இதுபோல் நூதன முறையில் மரங்களைத் திருடிச்செல்லும் மர்ம நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து, மீதமுள்ள மரங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com