மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டப்படி, நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்பிடித் தடைக்காலம்

தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டப்படி, நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
கடல் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தையொட்டி, தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ், தமிழகத்தின் கிழக்குக் கடல் நெடுகிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். இதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதல், நாகை உள்பட கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடல் பகுதிகளில் ஏப். 15-ஆம் தேதி முதல் மீன்பிடித் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஏப். 15-ஆம் தேதியிலிருந்து 45 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு முதல் மீன்பிடித் தடைக்காலம் 61 நாள்களாக நீட்டிக்கப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி வரை மீன்பிடித் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத இரண்டாம் வாரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகளை ஏப். 15-ஆம் தேதிக்குள் கரை திரும்ப மீன்வளத் துறை அறிவுறுத்தியதன்படி, ஏற்கெனவே கடலுக்குச் சென்ற பெரும்பாலான மீன்பிடி விசைப் படகுகள் கரை திரும்பியுள்ளன. தடைக்காலம் ஏப். 15-ஆம் தேதி முதல் அமலாகினாலும், ஏப். 14-ஆம் தேதி முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்த்தனர்.
இதனால், நாகை மீன்பிடி படகுத் துறைகளில் ஆயிரக்கணக்கான மீன்பிடி விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மரபு வழி மீன்பிடிப்பு மற்றும் ஃபைபர் படகுகள் மூலமான மீன் பிடிப்பு மட்டுமே இனிவரும் நாள்களில் நடைபெறும். இதனால், வரும் சில நாள்களில் மீன் உணவுத் தட்டுப்பாடு உருவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com