கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க இடம் தேர்வு

கொள்ளிடம் ஆற்றில் சந்தப்படுகை-மேலகுண்டலபாடி பகுதியில் கதவணை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் எம்எல்ஏ. பி.வி. பாரதி மற்றும் பொதுப்பணித்துறையினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

கொள்ளிடம் ஆற்றில் சந்தப்படுகை-மேலகுண்டலபாடி பகுதியில் கதவணை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் எம்எல்ஏ. பி.வி. பாரதி மற்றும் பொதுப்பணித்துறையினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு பழையார் கடலில் கலக்கிறது. கடல் முகத்துவாரத்திலிருந்து கடல்நீர் உட்புகுந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்கவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இதுகுறித்து சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.வி. பாரதியின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதையடுத்து, கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க முடிவெடுக்கப்பட்டு அதற்குரிய இடம் தேர்வு செய்யும் பணி எம்எல்ஏ. பி.வி. பாரதி, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கணபதி, திட்டம் மற்றும் வடிவமைப்பு உதவி செயற்பொறியாளர்கள் கலாராணி, மாலாவிஜயலெட்சுமி உள்ளிட்டோர் கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
அளக்குடி -கவரப்பட்டு இடையே கதவணை அமைக்க ஆய்வு செய்தபோது அவ்விடத்தில் கதவணை அமைந்தால் சில கிராம மக்களை வெளியேற்றும் நிலை ஏற்படுவதுடன், அப்பகுதியில் ஆறு அதிக ஆழம் உள்ளதால் பெரிய அளவில் செலவு ஏற்படும் என்பதால் அவ்விடம் கைவிடப்பட்டது. இதையடுத்து, சந்தப்படுகை-மேலகுண்டலபாடி (பேராம்பட்டு) இடையே கதவணை அமைக்க ஆய்வு செய்து அந்த இடம் உறுதி செய்யப்பட்டது.
அவ்விடத்தில் ரூ. 500 கோடி செலவில் சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு கதவணை அமைக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஏப்.18-ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் வகையில் அளவீடு செய்யப்படவுள்ளது என பொதுப்பணித் துறையினர் தகவல் தெரிவித்தனர். 
டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு விவசாயிகள்,பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com