கல்லூரி பேராசிரியைப் பிரச்னை: தவறிழைத்தவர் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

கல்லூரி பேராசிரியை, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றது யாருக்காக என்பது கண்டறியப்பட்டு, தவறுக்குக் காரணமானவர்

கல்லூரி பேராசிரியை, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றது யாருக்காக என்பது கண்டறியப்பட்டு, தவறுக்குக் காரணமானவர் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.
நாகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி : 
காவிரி பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழகத்துக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதாலும், தமிழகத்தின் காவிரி உரிமையை மீட்டெடுக்கவும் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்திய காவிரி உரிமை மீட்புப் பயணம் பொதுமக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுவர்மன்றத் தீர்ப்புப்படி, தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்கவும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 23-ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. 
காஷ்மீரில் 8 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை, கற்பனைக்குக் கூட எட்டாதது. இதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரால் ஒரு பெண் சீரழிக்கப்பட்டதும், புகார் அளித்த அவரது தந்தை கைது செய்யப்பட்டு  மர்மான முறையில் இறந்ததும் கடும் கண்டனத்துக்குரியது. இந்த இரு கொடிய நிகழ்வுகளையும் கண்டித்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. 
காவிரி உரிமை மீட்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தல், தடியடி நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, அமைதியான போராட்டங்களை வன்முறை போராட்டங்களாக சித்திரிக்க அரசு முயற்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, காவிரி உரிமை மீட்புக்குக்கான அமைதியான போராட்டங்கள் தொடரும்.
எச். ராஜாவின் தடித்த வார்த்தைகள் : பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வரம்பு மீறி பேசி வருகிறார். வன்முறைகளைத் தூண்டும் வகையில் பேசி வரும் எச். ராஜாவை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், மத்திய பாஜக அரசுக்குப் பணிந்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது. அவரது தடித்த வார்த்தைகள் தொடர்ந்தால், எதிர் விளைவுகள் தவிர்க்க இயலாததாகி விடும். 
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்குக் கொண்டுச் செல்ல ஒரு பேராசிரியை அழைப்பு விடுத்த செயல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதில், அந்தப் பேராசிரியை கைது செய்யப்பட்டிருப்பது மட்டும் பிரச்னைக்குத் தீர்வாக அமையாது. அந்தப் பேராசிரியை யாருக்காக இந்த முயற்சிகளை மேற்கொண்டார் என்பது கண்டறியப்பட்டு, அந்த நபர் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இந்தப் பிரச்னையில், தமிழக போலீஸாரின் விசாரணை மற்றும் ஆளுநர் அமைத்துள்ள விசாரணை குழு மூலமான விசாரணைகள் மூலம்  உண்மை வெளிப்படவும், தவறுக்குக் காரணமானவர் தண்டிக்கப்படவும் வாய்ப்பில்லை.  எனவே,  தவறிழைத்தவர் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமிக்க விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றார் இரா. முத்தரசன். அப்போது, முன்னாள் மாவட்டச் செயலாளர் எம். செல்வராசு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com