புயல் பாதித்த பகுதிகளில் கடனை வசூலிப்பதில் நிதி நிறுவனங்கள் கெடுபிடி: கிராம மக்கள் புகார்

நுண்கடன் நிதி நிறுவனங்கள் கிராம மக்களுக்கு கொடுத்துள்ள கடன் தொகையை வசூல் செய்வதில் கெடுபிடி காட்டுவதால், கஜா புயலால்


நுண்கடன் நிதி நிறுவனங்கள் கிராம மக்களுக்கு கொடுத்துள்ள கடன் தொகையை வசூல் செய்வதில் கெடுபிடி காட்டுவதால், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நுண்கடன் நிதி நிறுவனங்களின் இத்தகைய நிலைப்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கும், கட்டாய வசூலில் ஈடுபடும் நுண்கடன் நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக அரசு மற்றும் நாகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது புயல் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாகை மாவட்ட கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடன் என்பது பிரசித்திப் பெற்ற ஒரு சொல் ஆகும். பல்வேறு காரணிகளால் கடன் வாங்காமல் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளமுடியாது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. சிலர் வாங்கிய கடனை செலுத்திவிடுவார்கள். வாங்கிய கடனை செலுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மனம் வெதும்பி இறந்து போனவர்களும் உண்டு. வாங்கும் கடனை திரும்ப செலுத்தக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் கடன் வாங்குபவர்களும் உண்டு. இதற்கு அரசும் விதி விலக்கல்ல. மத்திய, மாநில அரசுகளும் கூட வாங்கிய கடனுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றன.
பண முதலைகளுக்கு பல்லாயிரம் கோடிகளை கடனாக அளிக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஏழை, எளிய மக்களுக்கு சிறு கடன்களை கொடுப்பதற்கு கூட பலவகையான சட்ட திட்டங்களை வகுத்து வைத்துள்ளதால் , ஏழை, எளிய, நடுந்தர மக்கள் வங்கியில் கடன் பெறுவது என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.
இதனால், கிராமப்புற கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் தங்களது குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய தனியார் நிதி நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். திரும்பி செலுத்துவதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனியார் நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று விடுகின்றனர். இதனாலேயே நுண்கடன் பெறுவோர்களது எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
சிறிய அளவில் தொழில் செய்வோருக்கு வழங்கப்படுவது நுண்கடன். இத்திட்டம் 1980 ஆண்டுகளில் வங்க தேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். கிராம மக்களின் முன்னேற்றத்துக்கும் இத்திட்டம் உதவியாக இருந்தது. வங்கிகளில் கடன் பெறுவது எளிதான காரியமில்லை என்பதால் இலகுவாக்கப்பட்டுள்ள இக்கடன் திட்டமானது நடுந்தர ஏழை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை அரசு சார்ந்த, சாராத நுண்கடன் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களும் நுண் கடன்களை வழங்கி வருகின்றன. எதிர்காலத்தில் எப்படி கடனை செலுத்தப் போகிறோம் என்பது குறித்து எவ்வித திட்டமிடலும், ஆய்வுகளும் இல்லாமல் கிராம மக்கள் நுண் கடன்களைப் பெற்றுவிடுகின்றனர்.தொழில் வாய்ப்புகள் இல்லாத பெண்கள் இத்திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ரூ.30 ஆயிரம், 50 ஆயிரம் எனக் கடனை பெற்று அதனைத் திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மக்களும் விதிவிலக்கல்ல.
நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, கிராம விடியல், மதுரா, எக்விடாஸ், முத்தூட், சுமைல் , எச்டிஎப்சி, ஆர்பிஎல், திசா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் மக்கள் நுண் கடன்களைப் பெற்று மாதத் தவணைகளில் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கிராமப் புறங்களில் வசிக்கும் நடுத்தர, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த விவசாயக் கூலி வேலைப் பார்க்கும் பெண்கள் பலர் ரூ.50 ஆயிரம் முதல் லட்சங்கள் வரை கடனாகப் பெற்றுள்ளனர்.
தற்போது, கஜா புயல் சீற்றத்தால் நாகை மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகள், குடிசைகள், கால்நடைகளை இழந்து வாழ்வதற்கு வழியின்றி திண்டாடி வருகின்றனர். பலர் புயல் பாதுகாப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில்,நுண்கடன்களைக் கொடுத்துள்ள நிதி நிறுவனங்கள் மாதத் தவணையை வசூல் செய்வதில் கெடுபிடி காட்டிவருவதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் வட்டங்களுக்குள்பட்ட கிராமங்களில் நுண்கடன் கொடுத்துள்ள நிதி நிறுவனங்களின் பணியாளர்கள் பலர் மாதத் தவணை வசூல் செய்வதில் கெடுபிடிகாட்டுவதுடன், பொருத்தமில்லாத நேரங்களில் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராகவும், வாங்கியுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் கூறியது:
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தில் திருக்குவளை,கீழ்வேளூர் வட்டங்களுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்கள் எல் அண்ட் டி, கிராம விடியல், மதுரா, எக்விடாஸ், முத்துட், சுமைல் போன்ற நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றுள்ளனர்.
சில நிறுவனங்கள் அதிகப்படியான வட்டியை வசூலிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே கடன்களை வழங்கியுள்ளன. தற்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள இப்பகுதி மக்கள் நுண்கடன் நிறுவன பணியாளர்களின் அடாவடிதனத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சிலர் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். ஆகையால் கஜா புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நுண்கடன் நிறுவனங்கள் அளித்துள்ள கடன் தொகையை அரசே ஏற்க வேண்டும் என்றும், கட்டாய வசூலில் ஈடுபடும் நுண்கடன் நிறுவன பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இது குறித்து, நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு பொதுத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் (டெல்டா) நிறுவனர் ஜெ.பி.கூறியது:
புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாகை மாவட்டம்,கீழ்வேளூர், திருக்குவளை வட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களிடம் நுண்கடன் அளித்துள்ள நிறுவனங்களின் பணியாளர்கள், மக்களை கட்டாயப்படுத்தியும், அவமரியாதையாகப் பேசியும் வசூலில் ஈடுபட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.ஏழை,எளிய மக்கள் நுண்கடன் நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com