வேதாரண்யத்தில் நிகழாண்டு உப்பு உற்பத்தி தொடக்கம்: கொள்முதல் விலை குறைவால் பணிகள் சுணக்கம்

தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கும், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நிகழாண்டுக்கான உப்பு உற்பத்தி

தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கும், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நிகழாண்டுக்கான உப்பு உற்பத்தி பருவம் தொடங்கியுள்ளது. இருப்பினும், உப்பு கொள்முதல் விலைக் குறைவால் உற்பத்தியாளர்களிடையே ஆர்வம் குறைந்து, பணிகள் சுணக்கமாக நடைபெறுகின்றன.
வேதாரண்யம் பகுதியில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.
இப்பகுதியில் இரண்டு பெரிய தனியார் நிறுவனங்கள் தவிர 670 சிறு, குறு உற்பத்தியாளர்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இப்பணியில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
விலை குறைவு: கடந்த ஆண்டு மழை பொய்த்து,  வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டில் சுமார் 6 லட்சம் டன்  உப்பு உற்பத்தி செய்யப்பட்டன.
ஆனால், கொள்முதல் விலை குறைவு காரணமாக, வெளியிடங்களுக்கு உப்பு அனுப்புவதில் தேக்க நிலையிருந்தது. சில உற்பத்தியாளர்கள் இருப்பு வைத்து பின்னாளில் விற்பனை செய்வதில் ஏற்படும் பொருளாதார செலவினங்களை கருத்தில்கொண்டு, விலை கட்டுப்படியாகாவிட்டாலும் வேறு வழியின்றி விற்பனை செய்தனர். இருப்பு வைத்து விற்பனை செய்த உற்பத்தியாளருக்கும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
உப்பு உற்பத்தி தொடக்கம்: நிகழாண்டு, ஜனவரி முதல் வாரத்தில் உப்பு உற்பத்திக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, பொங்கல் நாளில் பொன்னுப்பு (முதல் உப்பு) எடுக்கப்பட்டாலும்,  உற்பத்தி, தாமதமாக தற்போதுதான் தொடங்கியுள்ளது. இதற்கு காரணமாக உற்பத்தி செய்த உப்பை வெளியிடங்களுக்கு ஏற்றிச் செல்வதில் லாரிகள் தட்டுப்பாடு, விலை குறைவு போன்றவை கூறப்படுகின்றன. இதனால், நிகழ் பருவப் பணிகள் தொடங்கப்பட்டாலும், விறுவிறுப்பின்றி சுணக்கமாகவே பணிகள் நடைபெறுகின்றன.
கட்டுப்படியாகாத கொள்முதல் விலை:
இதுகுறித்து வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணையத்தின் செயலாளர் வி. செந்தில் கூறியது:
கடந்த ஆண்டில் அம்பாரம் அமைக்கும் முன்பு இருந்த கட்டுப்படியாகாத கொள்முதல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.அதாவது ஒரு டன் உப்பு ரூ.500 முதல் ரூ.600 என்ற விலையில்  வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். 
அம்பாரம் (குவியல்)அமைத்து பாதுகாக்க ஒரு டன்னுக்கு ரூ.150 வரையில் கூடுதல் செலவாகிறது.
தற்போது டெல்டாவில் நெல் அறுவடைப் பணிகள் நடைபெறுவதால் உப்பு ஏற்ற வாடகை லாரிகள் கிடைப்பதில்லை. இதனால், புது உப்பு உற்பத்திப் பணிகள் கொஞ்சம் மெதுவாக இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் வெளி மாநில 
உப்பு: தமிழக உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடத்தையும், வேதாரண்யம் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களுக்கு குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து உப்பு கொண்டுவரப்படுவதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு போதிய விலை கிடைப்பதில்லை.
மண்டல முறைக்கு கோரிக்கை: உப்பு விற்பனை செய்வதில் இருந்து வந்த மண்டல முறை பல ஆண்டுகளுக்கு முன்பு ரத்தானது. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் தென் மண்டலமாகவும், இங்கு உற்பத்தியாகும் உப்பு இந்த மாநிலங்களுக்குள்ளாகவே சந்தைப்படுத்தும் முறையும் இருந்து வந்தது.
வெளிமாநில கொள்முதலை தடுக்க மீண்டும் மண்டலமுறை விற்பனையை கொண்டுவரவும், வேதாரண்யம் உப்பை குறைந்த செலவினத்தில் கொண்டு செல்ல ஏதுவாக இருந்துவந்த திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி வரையிலான சரக்கு ரயில் இயக்கத்தை மீண்டும் கொண்டுவர ஏதுவாக,  ரயில் அகலப் பாதைப் பணிகளை வேகப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com