15 நாள்களுக்குள் பயிர்க் காப்பீடு வழங்காவிட்டால்தலைமைச் செயலகத்தில் படுத்துறங்கும் போராட்டம்

15 நாள்களுக்குள் பயிர்க் காப்பீடு வழங்காவிட்டால் விவசாயிகளை அழைத்துச் சென்று சென்னை தலைமைச் செயலகத்தில்

15 நாள்களுக்குள் பயிர்க் காப்பீடு வழங்காவிட்டால் விவசாயிகளை அழைத்துச் சென்று சென்னை தலைமைச் செயலகத்தில் படுத்துறங்கும் போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு கூறினார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பாக 2016-17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் கடந்த டிச. 18 -ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டார விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜன் தலைமையில், 69 -ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று, பி. அய்யாக்கண்ணு பேசியது:
விவசாயத்தின் நிலை பல்வேறு நிலைகளில் நாளுக்குநாள் கேள்விக்குறியாகி வருகிறது. விவசாயத்தில் இருமடங்கு லாபம் காணவும், நதிகளை இணைக்கவும் தேர்தலின்போது வாக்குறுதியளித்த பிரதமர் மோடி, தில்லியில் போராடிய எங்களை (விவசாயிகளை) சந்திக்காததால்தான் நிர்வாணப் போராட்டத்தைக் கையில் எடுத்தோம். அரசியல் பாராமல் அனைவரும் விவசாயிகள் என்ற உணர்வோடு போராடினால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நான் இங்கு வந்த பிறகு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்களோடு பேசினேன். பயிர்க் காப்பீடு தொடர்பாக செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட பட்டியலில் தவறு நடந்துள்ளதையும், அது சரிசெய்யப்பட்டு 15 நாள்களில் உரிய காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்; நம்புகிறோம். 15 நாள்களுக்குள் கிடைக்காவிட்டால், விவசாயிகளைஅழைத்துச் சென்று சென்னை தலைமைச் செயலகத்தில் படுத்துறங்கும் போராட்டம் நடத்தப்படும்.
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றார் அய்யாக்கண்ணு.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு முன்னிலை வகித்தார். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க பொதுச் செயலாளர் பழனிவேல், வணிகர் சங்க பேரவை மாநில நிர்வாகி வேதை. முருகையன், வட்டார விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஒளிச்சந்திரன், அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com