காவிரி கடைமடை மாவட்டங்களில் களை கட்டுகிறது பொங்கல் பண்டிகை

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, மக்கள் கூட்டத்தால் கடைவீதிகள் களை கட்டியுள்ளன.

காவிரி கடைமடை மாவட்டங்களான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, மக்கள் கூட்டத்தால் கடைவீதிகள் களை கட்டியுள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு ஆன்மிக ரீதியாக ஏராளமான காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும், ஆடியில் விதைத்து, மார்கழியில் மகசூல் ஆகும் நெல் விளைச்சலைக் கொண்டு, வருங்கால சுப நிகழ்வுகளின் தொடக்கமாகவும், வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி பகரும் வகையிலும் கொண்டாடப்படும் பண்டிகை என்ற காரணமே வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட காவிரி கடைமடை மாவட்டங்களில் பிரதானம் பெற்றுள்ளது.
இதன்படி, காவிரி கடைமடைப் பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையும், மாட்டுப் பொங்கலும் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
புத்தரிசியைக் கொண்டு, புதுப்பானையில் பொங்கலிடும் வழக்கம் காவிரி கடைமடை மாவட்டங்களில் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்படும் வழக்கம்.
காவிரி நீர் பிரச்னை, வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால், புத்தரிசியைக் கொண்டு பொங்கலிடும் வாய்ப்புப் பரவலாகக் குறைந்திருந்தாலும், கிராமப் புறங்களில் இப்பழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
காஸ் அடுப்பின் பயன்பாடு பிரதானம் பெற்றிருந்தாலும்,  பாரம்பரிய முறைப்படி வீட்டுக்கு வெளியே அல்லது முற்றத்தில் புதிய அடுப்பில் அல்லது செங்கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அடுப்புக் கட்டிகளைக் கொண்டு அடுப்பு அமைத்து பொங்கலிடும் வழக்கமும், புது மண் பானையில் பொங்கலிடும் வழக்கமும் இன்றளவும் பல வீடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, மண் பானை, மண் சட்டி, மண் அடுப்பு, பொங்கல் பண்டிகையில் பிரதானம் பெறும் செங்கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விற்பனை நாகை, திருவாரூர் மாவட்ட முக்கிய கடைவீதிகளில் விறுவிறுப்படைத் தொடங்கியுள்ளதால், மக்கள் கூட்டத்தால் கடைவீதிகள் களை கட்டி வருகின்றன.
நாகை மாவட்டம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், குத்தாலம்,  திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்பட நாகை, திருவாரூர் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளின் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன.
10 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், ஒரு கரும்பு ரூ. 25 முதல் ரூ. 30 என்ற விலையிலும், இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்துகள் தலா ரூ. 10 முதல் ரூ. 20  என்ற விலையிலும் விற்பனையாகி வருகின்றன. மண் பானைகள் ரூ. 50 -இல் இருந்து அளவுக்கேற்ப மாறுபட்ட விலையுடன் விற்பனையாகி வருகின்றன. 
மகள் மற்றும் சகோதரிகளுக்குப் பொங்கல் சீர் வரிசை வைப்பதற்காக கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, வாழைப்பழம், மஞ்சள் குங்குமம், பூ, வளையல்  போன்ற சீர் வரிசை பொருள்கள் வாங்குவதற்காக திரளானோர் கடைவீதிகளில் குழுமுவதால் அனைத்துக் கடைவீதிகளிலும் மக்கள் கூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதனால், அவ்வப்போது முக்கிய கடைவீதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.
புதுமணத் தம்பதிகளுக்கு தாய் வீட்டுச் சீராக பித்தளை பொங்கல் பானை வழங்கும் நடுத்தர வர்க்கத்தில் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, அனைத்து பாத்திரக் கடைகளிலும் பித்தளை பொங்கல் பானைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. பொங்கல் பானை கொள்முதலுக்காக திரளானோர் வருவதால், பாத்திரக் கடைகளும் களை கட்டியுள்ளன.
மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு சில ஜவுளிக் கடைகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தள்ளுபடி பயனைப் பெற இளைஞர்கள் கூட்டம் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால், ஒரு சில ஜவுளிக் கடைகளிலும் கூட்டம் நிரம்பியுள்ளன.
அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக தரைக் கடைகள் உள்ளிட்டவைகளால் ஏற்படும் போக்குவரத்துப் பிரச்னைகளைத் தவிர்க்க முக்கிய வீதிகளை ஒரு வழிப் பாதைகளாகவும், வாகனங்கள் கடைவீதிகளுக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் தடுப்புக் கட்டைகள் அமைத்தும் காவல் துறை சார்பில் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com