மனைப் பட்டா வழங்க பேரவையில் அமைச்சர் உறுதி: எம்.எல்.ஏ. தகவல்

மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் பட்டா இல்லாமல் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு சட்ட

மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் பட்டா இல்லாமல் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு சட்ட விதிகளுக்குள்பட்டு அவர்களுக்கு நில உரிமை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில், வியாழக்கிழமை நான் பேசியபோது, மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தளிக்கோட்டை காலனி, கருவாக்குறிச்சி காலனி, எடக்கீழையூர் வடக்கு உடையார் தெரு, சீனிக்குடிகாடு, கீழநாகை, மூவாநல்லூர் உப்புக்குளம் காலனி ஆகிய பகுதிகளில் மொத்தம் 490 குடும்பங்களுக்கு கடந்த 70 ஆண்டுக்கு மேலாக அந்தந்த பகுதியில் வசித்து, மனைப் பட்டா அங்கீகாரம் கிடைக்காமல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் கருவாக்குறிச்சி காலனி ஒரு பகுதிக்கு மட்டும் நில உரிமை பட்டா வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த ஆட்சியில் இதில் தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளாக கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மனைப் பட்டா பெறமுடியாத நிலை ஏற்படுமோ என்ற ஐயப்பாடு அந்த மக்களுக்கு இருப்பதை நீக்கிடும் வகையில், அவர்களுக்கு பட்டா உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
இதற்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர், எத்தனை ஆண்டுகள் குடியிருந்தாலும் அரசின் விதிகளுக்குள்பட்டு தான் பட்டா உரிமை வழங்க முடியும். ஏழை, மக்கள் வீடுகள் அமைத்து இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்போது, அந்த இடத்துக்கு பட்டா, சிட்டா, நில உரிமை இருப்பதில்லை. அந்த இடங்கள் ஆட்சேபகரமான புறம்போக்கு நிலமா, ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலமா என்பதை ஆராய்ந்து சட்ட விதிகளுக்குள்பட்ட, தடையாணைகள் தளர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் இடமாக இருந்தால் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கு தகுதியற்ற நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என அமைச்சர் உறுதியான பதில் அளித்தார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com