வாக்காளர் சேர்ப்புப் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம்

கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருக்கும் வாக்காளர் சேர்ப்புப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பதென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருக்கும் வாக்காளர் சேர்ப்புப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பதென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரத் துணைத் தலைவர் சு. தியாகராஜன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன், மாவட்டத் துணைச் செயலாளர் கோ. சிவக்குமார், துணைத் தலைவர் ஜெ. உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம் வரவேற்றார். பொருளாளர் தொ.மு. தனுசுமணி நன்றி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
ஏ பிரிவு மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் கிடையாது என்ற தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம் தெரிவிப்பது. மாணவர், ஆசிரியர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிக்கு ஆசிரியர்களுக்கு பதிலாக, ஆசிரியர் பயிற்றுநர்களைப் பயன்படுத்தக் கோருவது.
பள்ளிகளில் கற்பித்தல் பணி தொடர்பான பதிவேடுகள் பராமரிப்புக்கான அனைத்து வழிகாட்டல்களில் ஏற்படும் குழப்பங்களைப் போக்க, அனைத்து வழிகாட்டல்களையும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலமே வழங்கக் கேட்டுக் கொள்வது. கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருக்கும் வாக்காளர் சேர்ப்புப் பணி, சத்துணவு மாணவர் எண்ணிக்கைக் குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் பணி ஆகியவற்றை ஆசிரியர்கள் புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com