காவிரி வெற்றிக்கு அறிவுப்பூர்வமான செயல்பாடே காரணம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

அதிமுக அரசு அறிவுப்பூர்வமாக சிந்தித்து, சட்டப் போராட்டம் நடத்தியதன் காரணமாகவே தமிழகத்தின் காவிரி நீர் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது

அதிமுக அரசு அறிவுப்பூர்வமாக சிந்தித்து, சட்டப் போராட்டம் நடத்தியதன் காரணமாகவே தமிழகத்தின் காவிரி நீர் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீர் உரிமை மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: 
அதிமுக அரசு எப்போது கவிழும் என சிலர் கனவு கண்டார்கள். அவர்களின் கனவில் மண்ணைப் போட்டு, அமைதியான ஆட்சியை அதிமுக அளித்து வருகிறது. மக்கள் நலனுக்காக எந்தத் திட்டங்களைக் கேட்டாலும் மறுக்காமல் நிறைவேற்றி வருகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.  கடந்த ஆண்டு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்கு, மதகுகளிலிருந்து தண்ணீர் வடியாததே காரணம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து முதல்வருக்கு கடிதம் அளித்ததன் விளைவாக தற்போது, 405 குழாய் மதகுகளை, பாக்ஸ் கல்வெர்ட்டுகளாக மாற்ற ரூ. 54 கோடி நிதி ஒதுக்கீடு அளித்துள்ளார் முதல்வர். 
காவிரிப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகி, சட்டப்போராட்டம் நடத்தி, எந்தெந்த வாதங்களை முன்வைத்தால் தமிழக உரிமையை உறுதி செய்யலாம் என வல்லுநர்களுடன் ஆலோசித்து அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டதுதான் காவிரி வெற்றிக்குக் காரணம் என்றார் ஓ.எஸ். மணியன்.
அரசை அசைக்க முடியாது: அதிமுக அரசை யாராலும் அசைக்க முடியாது என வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு தெரிவித்தார்.  மேலும் அவர் பேசியது :
தமிழகத்துக்கு காவிரி வருமா? தண்ணீர் கிடைக்குமா? என அனைவரும் ஏக்கத்துடன் காத்திருந்த நிலையில், அதிமுக அரசு விவசாயிகளின் காவலனாக செயல்பட்டு, காவிரி உரிமையை உறுதி செய்துள்ளது. டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு தற்போது ரூ. 115.67 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது மறைவுக்குப் பின்னரும் அதிமுக 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும், அதிமுக அரசும் நிலைத்திருக்கும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்ன போதுகூட சிலர் முழுமையாக நம்பவில்லை. ஆனால், அந்த நம்பிக்கை தற்போது பிரகாசமாகியுள்ளது என்றார். 
பாவம் நீங்காது: காவிரி பிரச்னையில் தமிழகத்துக்குத் துரோகம் இழைத்த திமுகவின் பாவம் புஷ்கரத்திலும் நீங்காது என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியொற்றி செயல்பட்டு, அவர் நடத்திய சட்டப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு, காவிரியின் உரிமையை உறுதி செய்த பெருமை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியையே சாரும். தமிழக காவிரி பிரச்னையில் வரலாற்றுப் பிழையை ஏற்படுத்தி, தமிழகத்துக்குத் துரோகம் இழைத்த திமுகவின் பாவம் புஷ்கரத்திலும் (மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் கடந்த ஆண்டு நடைபெற்றது) நீங்காது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com