குரவப்புலத்தில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) வரையிலான அகல ரயில்பாதை அமைக்கும் திட்டப் பணியில் குரவப்புலம் கிராமத்தில்

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) வரையிலான அகல ரயில்பாதை அமைக்கும் திட்டப் பணியில் குரவப்புலம் கிராமத்தில் ரயில் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) வரை 1936-இல் ஆங்கிலேயரால் ரயில் பாதை அமைக்கப்பட்டது. குறுகிய பாதை (மீட்டர்கேஜ்) யாக இருந்த இந்த ரயில் தடத்தில் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு உள்பட மீன், விளை பொருள்களை வெளியிடங்களுக்கு ஏற்றிச் செல்ல ஏதுவாக இருந்த வந்தது. இதில், இயக்கப்பட்டு வந்த ரயில்கள் வேதாரண்யம், தோப்புத்துறை, குரவப்புலம், கரியாப்பட்டினம், மேலமருதூர் உள்ளிட்ட 6 நிறுத்தங்களில் ரயில் நின்று சென்றன. 
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் ரயிலும்,1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு சரக்கு ரயில் இயக்கமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த தடத்தில் (திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி) ரயில் பஸ் இயக்கம் நடைபெற்று வந்தது. இந்த ரயில்பஸ்சும், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போல அனைத்து நிறுத்தகங்களிலும் நின்று செல்ல வகை செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் ரயில்பஸ் இயக்கமும் 2004-இல் (சுனாமி தாக்கிய நாளுடன்) நிறுத்தப்பட்டது. இதனிடையே, இப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு குறுகிய பாதை அகல பாதையாக மாற்ற அரசு திட்டமிட்டது. இதற்கான முதல் கட்டப் பணிகளாக சிறு பாலங்கள், ரயில் நிறுத்தங்கள் போன்றவை தற்போது நடைபெற்று வருகிறது.
இத்திட்டப் பணியில் குரவப்புலத்தில் ஏற்கெனவே இயங்கி வந்தபடி ரயில் நிலையம் அமைக்க அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. 
இதையடுத்து, குரவப்புலத்தில் ஏற்கெனவே செயல்பட்டதைப்போல மீண்டும் ரயில் நிறுத்தம் அமைக்க அனுமதிக்கவும், புதிய திட்டப் பணியில் நிறுத்தகத்துக்கான நிலையக் கட்டடத்தை கட்டித்தரவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி குரவப்புலம் தபால் நிலையம் முன்பு திங்கள்கிழமை போராட்டக் குழுத் தலைவர் தலைவர் மா. ராஜப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ், அதிமுக பிரமுகர் மா. சரவணன், விவசாய சங்கத் தலைவர் ராஜன், திமுக, மதிமுக, இடதுசாரிகள், பாமக, காங்கிரஸ், பாஜக என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் கத்தரிப்புலம், குரவப்புலம், நாகக்குடையான், அவரிக்காடு, கருப்பம்புலம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமத்தினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com