காவிரி பிரச்னை: கடலில் மூழ்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 275 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் மூழ்கும் தற்கொலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 275 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் மூழ்கும் தற்கொலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 275 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க் காப்பீடு இழப்பீட்டு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு  உடனடியாக வழங்க வேண்டும், 2017-18 ஆம் ஆண்டில் கருகிய நெற்பயிர்களுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் கூட்டு இயக்கம் சார்பில் நாகை அவுரித் திடலிலிருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியரகம் சென்று, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பின்னர்,  நாகை புதிய கடற்கரையில் விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி, திரளான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காலை நாகை அவுரித் திடலில் திரண்டனர். அங்கு, மேளதாள முழக்கங்களுடன் வேளாண்மையைப் போற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, அவுரித் திடலிலிருந்து மாவட்ட ஆட்சியரம் நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, நாகை மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையிலான போலீஸார், விவசாயிகளைத் தடுத்து கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், விவசாயிகளுக்கும், போலீஸாருக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு சில விவசாயிகள் தங்கள் மேலாடைகளைக் களைந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போலீஸார் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல் துறை வாகனங்களில் ஏற்றினர்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலாளர் தலைமையிலான, இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள், பெண்கள் உள்பட 275 பேரை வெளிப்பாளையம் போலீஸார் கைது செய்தனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்தையொட்டி, நாகை அவுரித்திடல், மாவட்ட ஆட்சியரகம் மற்றும் புதிய கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com