தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ ஞானபுரீசுவரர் கோயில் பெருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீ ஞானபுரீசுவரர் கோயில் ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீ ஞானபுரீசுவரர் கோயில் ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீ ஞானபுரீசுவரர் கோயிலின் (ஆதீன குரு முதல்வர் ஜீவ சமாதி கோயில்) ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஆதீனத்தில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாடு நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான இவ்விழா மே 26 முதல் ஜூன் 5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளான சனிக்கிழமை ஸ்ரீ ஞானபுரீசுவரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், காலை சுமார் 11 மணியளவில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தருமபுரம் ஆதீன 26 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் திருக்கொடியை ஏற்றி, விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருநெறியத் தெய்வத் தமிழ் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக புராணங்களில் இறைக்கொள்கை எனும் தலைப்பில் புராணக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று பேசியது: தருமபுரம் ஆதீனமானது தமிழுக்கும், சைவத்துக்கும் சிறந்த தொண்டாற்றி வருகிறது. தருமபுரம் ஆதீன ஆட்சிப் பீடத்திலிருந்த 25 ஆதீனங்களும் தமிழ் தொண்டாற்றியதுபோல், 26 -ஆவது ஆதீனத்தின் தமிழ்த் தொண்டும் சிறப்புக்குரியது. போற்றக்கூடியது.
குரு வழிபாடு என்பது சிறப்புக்குரியவையாகும். குருநாதர் தான் நம்மை காப்பாற்றுவார் என்பதால், அனைவரும் குரு வழிபாடு செய்ய வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களை குரு பக்தியோடு வழிபட வேண்டும். அதேபோல், ஆசியர்களும் மாணவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். சித்தாந்தத்துக்கு முரண்பட்டவைகளை ஒருபோதும் செய்யக் கூடாது.
ஒழுக்க நெறியை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். நாடு சுபிட்சமாக இருக்க வேண்டுமானால் முன்னோர்களை வழிபட வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் கந்தபுராணம் ஆகியவற்றை முக்கண்களாகப் போற்ற வேண்டும் என்றார் இளைய சந்நிதானம்.
தொடர்ந்து, மாலை நேர நிகழ்வாக, சைவம் காத்த சமயாசாரியார் நால்வர் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், நாகை மாவட்ட நீதிமன்ற குற்றவியல் நீதிபதி ஜி. மணிகண்டராஜா பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சிகளில், தருமபுரம் ஆதீனம் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் எம். திருநாவுக்கரசு, தருமபுரம் ஆதீனம் கல்லூரி முதல்வர் முனைவர் சி. சுவாமிநாதன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆதீனப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் கலந்துகொண்டனர்.
திருநெறிய தெய்வத் தமிழ் மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள்
திருநெறிய தெய்வத் தமிழ் மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளாக மே 27 -இல் சிவநெறியை வழி வழியாகக் காத்து வந்த ஸ்ரீ சந்தானாச்சாரியார் நால்வர்(கருத்தரங்கம்), 28-இல் குருசந்தான மரபில் வரும் ஸ்ரீஅருள் நமச்சிவாய மூர்த்திகள்(சிந்தனைஅரங்கம்), 29-இல் சந்தான மரபில் வரும் ஸ்ரீகாழிகங்கை மெய்கண்டார்(சிந்தனை அரங்கம்), 30-இல் ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் (பட்டிமன்றம்) 31-இல் பழுதைக்கடி ஸ்ரீ ஞானசம்பந்தர் (ஆய்வரங்கம்), ஜூன் 1-இல் சிவபுரம் ஸ்ரீ ஞானப்பிரகாசர் (திருக்கல்யாணம் திருநாள்), 2-இல் சிவபுரம் ஸ்ரீ தத்துவ பிரகாசர் (பட்டிமன்றம்), 3-இல் திருவாரூர் கமலை ஸ்ரீ ஞானப்பிரகாசரின் குரு தந்தையார் பழுதைக்கடி ஞானபிரகாசர்(சிந்தனை அரங்கம்), 4-இல் குருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஸ்ரீ ஞானப்பிரகாச குருபூஜை, 5-இல் பட்டினப்பிரவேசம் ஆகியவை நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com