வேதாரண்யம்: சம்பா நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள்  கவலை

வேதாரண்யம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களில் புகையான்

வேதாரண்யம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களில் புகையான் மற்றும் இலைக் கருகல் நோய்த் தாக்கி வருவது விவசாயிகளுக்கிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டதால், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் பகுதியில் காவிரி நீரை எதிர்பார்த்து, ஆற்றுப் பாசனப் பரப்புகளில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவடைந்தது. ஆனால், எதிர்பார்த்தப்படி தண்ணீர் வராததால், பெரும் சிரமங்களுக்கிடையே நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா இளம் பயிர்களை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக வேதாரண்யம் பகுதியின் தெற்கு கடலோரக் கிராமங்களில் மட்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்த மழையைப் பயன்படுத்தி, மானாவாரி மற்றும் மின் இறவைப் பாசனம் பெறக் கூடிய பரப்புகளில் நேரடி விதைப்பு செய்தனர்.
தற்போது, இளம் பயிராக உள்ள இந்த சம்பா சாகுபடி வயல்களில் நோய்த் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகின்றன. இதனால், நெற்பயிர்களின் தோகை மஞ்சள் பழுப்பு நிறமாக மாறி கருகி வருகின்றன.
குறிப்பாக தகட்டூர், தென்னடார், பஞ்சநதிக்குளம், மருதூர், வாய்மேடு கிழக்கு உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்களில் பரவலாக இலைக் கருகல் மற்றும் புகையான் நோய்த் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், கவலையடைந்துள்ள விவசாயிகள்,  நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகின்றனர். 
இதனிடையே, மூன்றாம் கட்டமாக ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், ஆதனூர், கரியாப்பட்டினம், ஓரியம்புலம், வேட்டைக்காரனிருப்பு, தென்னம்புலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் மானாவாரி நிலங்களில் நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் முனைப்புக்காட்டி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com