தமிழகத்தில் மக்கள் விரும்பும் மக்களாட்சி நடைபெறுகிறது: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

தமிழகத்தில் மக்கள் விரும்பும் மக்களாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

தமிழகத்தில் மக்கள் விரும்பும் மக்களாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
நாகை அவுரித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, அதிமுகவின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் யாரும் மாற்றுக் கட்சிக்கு செல்லவில்லை. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, சட்டப் பேரவைக்கு வராத மு.க. ஸ்டாலின், அவர் மறைவுக்குப் பிறகு, சட்டப் பேரவையில் ரகளையில் ஈடுபட்டபோது, வாய்மூடி மௌனமாக இருந்தோம். 
அதிமுகவை ஆட்சியிலிருந்து இறக்குவதற்கு பல முயற்சிகளையெல்லாம் மேற்கொண்ட திமுகவுக்கு தோல்வி தான் பரிசாக கிடைத்தது. அதிமுகவை, ஒருபோதும் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.
தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என கூறும் திமுகவினர், தற்போதைய ஆட்சியில் என்ன குறையைக்  கண்டுள்ளனர் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் வேளாண்மையில் புதிய விஞ்ஞான உத்திகள் கையாளப்பட்டு வரும் நிலையில், இந்திய மாநிலங்களில் உணவு உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளதால், தொழில்வளர்ச்சியில்  முன்னேற்றமடைந்து வருகிறது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முனைவோர்களுக்கும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. 
142 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் கடும் வறட்சியை சந்தித்தப்போதும் கூட, குடிமராமத்து பணிகள் எனும் அற்புதத் திட்டத்தை அறிவித்து குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள் எல்லாம் தூர்வாரப்பட்டுள்ளன. 
வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள போதிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. மக்கள் எதை விரும்புகிறார்களே அதை செய்யும் அரசாக தமிழக அரசின் செயல்பாடு உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் விரும்பும் மக்களாட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றார் அவர். 
அதிமுக நகரச் செயலர் தங்க. கதிரவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஆர். ஜீவானந்தம், கே.ஏ. ஜெயபால், மாவட்ட இணைச் செயலர் என். மீனா, ஒன்றியச் செயலர்கள் ஆர். ராதாகிருஷ்ணன் (திருமருகல்) கே. குணசேகரன் (நாகை), எம். சிவா (கீழ்வேளூர்) ,எஸ்.வேதையன் (கீழையூர்), நாகை சட்டப் பேரவைத் தொகுதிச் செயலர் எஸ். ஆசைமணி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கோடிமாரி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com