முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பின் பேரில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்

மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பின் பேரில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், எரிபொருள்களின் விலையை உடனடியாகக் குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. 
இந்தப் போராட்டம் காரணமாக, நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, பொறையாறு, கீழ்வேளூர், திருமருகல் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடைகள் அடைக்கப்
பட்டிருந்தன.
நாகையில் பெரியக் கடை வீதி, நாணயகாரத் தெரு, நீலா தெற்கு வீதி, பப்ளிக் ஆபீஸ் சாலை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில், மருந்தகங்கள் வழக்கம் போல இயங்கின. பூக்கடைகள், பழக்கடைகள் குறைந்த எண்ணிக்கையில் இயங்கின. தேநீர் கடைகள், உணவகங்கள், பலசரக்குக் கடைகள், நகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக, மக்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 
நாகை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக காவல் துறை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தனியார் வாடகை கார்கள், ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டிருந்தது. அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின. 
கடைகள் அடைப்பு மற்றும் வாடகை வாகனங்களின் இயக்கம் ரத்து உள்ளிட்டவைகளால் திங்கள்கிழமை பிற்பகல் வரை நாகை மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையில் சுணக்கம் உணரப்பட்டது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com