476 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்

சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்

சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்கள் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 476 மாற்றுத்  திறனாளிகளுக்கு ரூ 57.65 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகையில் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில்,  கம்பெனிகள் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி  உபகரணங்கள் வழங்கும் விழா, நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று,  நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 476 பயனாளிகளுக்கு, ரூ.  57.65 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை
வழங்கினார்.
முன்னதாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது:
தமிழக அரசு, மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் சமூக நலத்துறை சமூகத்தின் அங்கமாகவும், பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களின் உயர்வுக்காக நலத் திட்டங்கள் வழங்கி வருகிறது.
கடந்த 2017-18 -ஆம் ஆண்டில் மட்டும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 5,504 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கம்பெனி சமூகப் பொறுப்புணர்வு  திட்டத்தின் கீழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பெங்களூரு அலிம்கோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஜூலை மாதத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், சமூக நலத்துறை சார்பில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு ராஷ்டிரிய வையோஷிரி திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு காதொலிக் கருவி, மடக்கு சக்கர நாற்காலிகளும்  வழங்கப்படுகிறது.
பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மனு அளித்தவர்களில் 17 பேருக்கு ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கக் கூடிய 3 சக்கர சைக்கிள்களும், 4 பேருக்கு தலா ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளும், தொழுநோய் பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த 28 பேருக்கு தலா ரூ. 3,950 மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் செல்லிடப்பேசிகளும்  வழங்கப்படுகின்றன.
பார்வையற்றவர்களுக்கு ஸ்மார்ட் செல்லிடப்பேசி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான டேப்லெட்,  ப்ரெய்லி உபகரணம், பிரெய்லி பலகை, மடக்குக் குச்சிகள், சக்கர நாற்காலிகள்,  ஊன்றுகோல், காலிப்பர்கள், செயற்கை கை, கால்கள்,  மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ரூ. 10.26 லட்சம் மதிப்பீட்டிலான செயற்கை கை, கால்கள், சட்டப் பேரவை 110 விதி அறிவிப்பின்படி, ஆவின் நிறுவன உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வங்கிக் கடன் மானியம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்களிடமிருந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக  அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
இதைத் தொடர்ந்து, பணியிலிருந்தபோது உயிரிழந்த தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.  தனி வட்டாட்சியர் க. நாராயணசாமி என்பவரின் வாரிசுதாரரான நா. தினேஷ் என்பவருக்கு, கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், நாகை சார் ஆட்சியர் கமலேஷ் கிஷோர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர். விக்டர் மரியஜோசப், சென்னை பெட்ரோலியம்  கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவன தொழில்நுட்ப  இயக்குநர் ஆர். காந்த், பெங்களூரு அலிம்கோ நிறுவன மேலாளர் அனுபம் பிரகாஷ்,  சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com