880 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சர் ஓ.எஸ். மணியன் நடத்தி வைத்தார்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 880 கர்ப்பிணிகளுக்கு

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 880 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நடத்தி வைத்தார்.
நாகை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா, நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட  ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமையில்  நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று,  மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 880 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தார்.
விழாவில், கர்ப்பிணிகளுக்கு புடவை, மாலை, வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் பூசி நலுங்கு வைக்கப்பட்டதுடன் சுகப்பிரசவம் வேண்டி சிறப்பு  ஆரத்தி வழிபாடு செய்யப்பட்டது. மேலும், கர்ப்பக்கால பராமரிப்பு குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது:
தாய்மை அடையும் பெண்களுக்கு தமிழக அரசு பல்வேறு  உதவிகளை செய்து வருகிறது. மகப்பேறு  உதவித் தொகை ரூ. 18 ஆயிரம்  மற்றும் குழந்தைப் பெட்டகம், மருத்துவம் சார்ந்த அனைத்து உதவிகளும்  வழங்கப்படுகின்றன.
வளர்இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு கல்வி  மற்றும் தொழிற்பயிற்சிகள், கர்ப்பக்கால பராமரிப்பு, கர்ப்பிணிகள் மற்றும் சிறு குழந்தைகளின் எடை  கண்காணிப்பு, இணை உணவு வழங்குதல், முன்பருவக் கல்வி, குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல தயார்படுத்துதல் போன்றவற்றுடன் பேறுகால சிசு மரணம் தவிர்க்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள்  ரத்த சோகையைத்  தவிர்த்து, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்த்தல் போன்றவை   ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நடைபெறுகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில்  செயல்படும் 1,325 அங்கன்வாடி மையங்கள் மூலம் க ர்ப்பிணிகளுக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் 2017-18 -ஆம் ஆண்டில் 12,627 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்.
இதேபோல், சுகாதாரத்துறையுடன் இணைந்து தடுப்பூசிகள், கர்ப்பக்கால பராமரிப்பு,  மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
நாகை மாவட்டத்தில் 1,640 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படவுள்ளது என்றார் அமைச்சர்.
விழாவில், நாகை சார் ஆட்சியர் கமல்கிஷோர், சமூகப் பாதுகாப்புத் திட்டம் தனித் துணை ஆட்சியர் எம்.  வேலுமணி, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி  தலைவர் எஸ். ஆசைமணி, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வி. கல்யாணி, கண்காணிப்பாளர் கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வக்குமார், நாகை வட்டாட்சியர்   இளங்கோவன் மற்றும்  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com