தலைஞாயிறு பகுதியில் பாசன நீர் தட்டுப்பாடு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் பாசன நீர் தட்டுப்பாடு காரணமாக, வாய்க்கால்களில் வரும் குறைந்த அளவு தண்ணீரை,


வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் பாசன நீர் தட்டுப்பாடு காரணமாக, வாய்க்கால்களில் வரும் குறைந்த அளவு தண்ணீரை, ஆயில் இஞ்சின் மூலம் விவசாயிகள் வயல்களுக்குப் பாய்ச்சு வருகின்றனர். இதனால், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி வருகின்றன. இந்நிலையில், அடப்பாறு உள்ளிட்ட சில ஆறுகளில் வெள்ளிக்கிழமை முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் குறைந்த அளவே வருவதால், வயல்களுக்கு தானாக பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இறைவை செய்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சொந்த மற்றும் வாடகை ஆயில் இஞ்சின்களை பயன்படுத்துகின்றனர். இதனால், செலவு அதிகரிப்பதுடன், ஆயில் இஞ்சின்களை வயல் பகுதிக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வாய்க்கால் ஓரங்களில் காணப்படும் விளை நிலங்களில் உள்ள பயிர்களுக்கு இந்த முயற்சி உயிர் வாய்த் தண்ணீராகக் கருதப்படுகிறது. அடுத்த சில நாள்களில் மழையோ, தேவையான அளவு தண்ணீரோ கிடைத்தால் மட்டுமே இந்த பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லையெனில் உயிர் வாய்த் தண்ணீர் பெற்ற வயல்கள் மட்டுமல்ல, அனைத்து வயல்களிலுமே சம்பா பயிர் பாதிக்கப்படும் நிலையுள்ளது.
உப்பு நீர் உள்புகுந்த வாய்க்கால்: இதனிடையே மகாராஜபுரம், பிராந்தியங்கரை, கரியாப்பட்டினம் பகுதியில் கடல் பகுதிக்குச் செல்லும் பிரதான பாசன, வடிகால் ஆறான போக்கு வாய்க்காலில் சுமார் 5 அடி வரையில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
அவரிக்காடு பகுதியில் இறால் பண்ணைகளுக்கான உப்பு நீர் தடுக்கப்படாமல், போக்கு வாய்க்காலில் கலந்ததால் பாசன நீரில் உப்புத் தன்மை அதிகரித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிராந்தியங்கரை உள்ளிட்ட கிராம விவசாயிகள் போக்கு வாய்க்கால் தண்ணீரைப் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். மாறாக இந்த வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதைவழி குழாய் மூலம் உம்பளச்சேரி பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com