அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அரசு வழங்குதுபோல் இளநிலை உதவியாளருக்கான ஊதியத்தை வழங்கி காலமுறை ஊதியத்துக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி

புதுச்சேரி அரசு வழங்குதுபோல் இளநிலை உதவியாளருக்கான ஊதியத்தை வழங்கி காலமுறை ஊதியத்துக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, நீடாமங்கலத்தில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும்  உதவியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம். மகேஸ்வரி தலைமை வகித்தார். 
சங்கத்தின் செயலாளர் பி. மாலதி முன்னிலை வகித்தார்.
வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொறுப்பாளர் குரு. சந்திரசேகரன், அரசு ஊழியர் சங்கச் செயலாளர் கௌதமன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.
அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஆர். முத்துகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகிகள் பி. பாலசுப்பிரமணியன், எஸ். ஆறுமுகம், நெடுஞ்சாலைத்துறை யு. குமரவேலு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி முருகையன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஊழியர் சங்க நிர்வாகி செல்வி, அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி கே. முனியாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்குவதுபோல் இளநிலை உதவியாளருக்கான ஊதியத்தை வழங்கி காலமுறை ஊதியத்துக்குள் கொண்டு வர வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், 1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும், மே மாதம் கோடை விடுமுறை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் பொருளாளர் பி. ராதா நன்றி கூறினார்.
வலங்கைமானில்...
வலங்கைமானில்,  தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் புஷ்பநாதன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 
இதில், அங்கன்வாடி பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முத்துப்பேட்டையில்...
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காட்டில், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் மாதவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் தமிழரசி, நிர்வாகிகள் வனசுந்தரி, பொன்னி, அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் லெனின், சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகி ராமசாமி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் பாண்டியன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com