"மூன்றாவது பாலினத்தவர்களுக்கான சலுகைகள் தொடர ரயில்வே வாரியம் உத்தரவிட வேண்டும்'

மூன்றாவது பாலினத்தவர்களுக்கான சலுகைகள் தொடர ரயில்வே வாரியம் உத்தரவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறினார்.

மூன்றாவது பாலினத்தவர்களுக்கான சலுகைகள் தொடர ரயில்வே வாரியம் உத்தரவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறினார்.
இதுகுறித்து நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்தியாவில் 4.87 லட்சம் திருநங்கைகள் வசிக்கின்றனர். மூன்றாவது பாலினமாக இவர்களை அறிவித்து உச்சநீதிமன்றம் 2014, ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. ஆதார், வாக்காளர் அட்டை போன்றவற்றில் மூன்றாவது பாலினமாக இவர்கள் ஏற்கப்பட்டார்கள். முன்பதிவு ரயில் பெட்டிகளில் பயணத்துக்கான ஆவணங்களாக இவைகள் ஏற்கப்படுவதால், கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் முன்பதிவு விண்ணப்பங்களில் இவர்களுக்கு தனிக் காலம் ஒதுக்கி அடைப்புக்குள் ஆணா/பெண்ணா எனக் கோரியது. இதனால் கடும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்தன. சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஆண்/பெண் என கோருவதைக் கைவிட ரயில்வேயை  வலியுறுத்தியது. அதை ஏற்று ரயில்வே அமைச்சகம் கடந்த மாதம் முதல் மூன்றாவது பாலினமா என மட்டும் விண்ணப்பத்தில் கோருகிறது.
முன்பதிவில் இவர்கள் பெற்று வந்த மூத்த குடிமகன்களுக்கான 50 சதவீத கட்டண சலுகை, ராணுவம் மற்றும் காவல்துறையில் விதவைகள் சலுகை போன்ற பெண்கள் பிரிவு சலுகைகள் பெற முடியவில்லை.
மேலும், ஒவ்வொரு முன்பதிவு பெட்டியிலும் நான்கு கீழ் படுக்கைகள் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கென கோட்டா உள்ளது. அந்த கோட்டாவில் இதுவரை முன்னுரிமை பெற்று முன்பதிவு பயணச்சீட்டு பெற்று வந்தார்கள். அந்த சலுகையும் கிடைக்காமல் போய்விட்டது.
58 வயதுக்கு மேற்பட்ட  மூன்றாம் பாலினத்தவர்கள் முன்பதிவு இல்லாத விரைவு ரயில்களில் மூத்த குடிமகன்களுக்கான கட்டணச் சலுகையில் பயணிக்க இதுவரை உத்தரவு வெளியாகவில்லை.
இதனால் டிக்கெட் பரிசோதனை மற்றும் டிக்கெட் முன்பதிவின்போதும் கடும் சர்ச்சைகள் ஏற்படுகின்றன. உச்சநீதிமன்றம் இவர்களின் சலுகைகளைப் பறிக்கக் கூடாது என 2014 ஆம் ஆண்டு தீர்ப்பில் சுட்டிகாட்டி இருக்கிறது.
தனி பாலின அறிவிப்பால் கிடைத்து வந்த அனைத்து ரயில்வே சலுகைகளும் மூன்றாவது பாலினத்தவர்களுக்கு தற்போது பறிபோய் விட்டது. சர்ச்சைகளுக்கு தீர்வாக சலுகைகள் தொடர ரயில்வே வாரியம் உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com