உணவு வணிகர்கள் உரிமம் பெறுவது அவசியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உரிமம் பெறுவது அவசியம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உரிமம் பெறுவது அவசியம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய 2011-ஆம் ஆண்டு முதல் நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி இந்தியா முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வந்த உரிமத்தை புதிய சட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையே வழங்குகிறது. உணவு வியாபாரிகள் அவர்களது ஆண்டு விற்பனை தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவுத் தொழிலில் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த சில்லறை விற்பனையாளர்கள் முதல் தெருவில் கூவி விற்பவர்கள் வரை அனைவரும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கு கீழ் வியாபாரம் செய்பவர்கள் பதிவும், அதற்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் உரிமமும் பெற வேண்டும். உரிமம்பெற, தயாரிப்பாளர்கள் அடையாள அட்டை நகல், முகவரி உறுதி சான்றிதழ், நிறுவனத்தின் வரைபட நகல், தயாரிப்புக்கு பயன்படுத்தும் இயந்திரங்களின் விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உணவு வணிகம் செய்பவர்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். அல்லது அருகிலுள்ள கணினி பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, காலதாமதமின்றி பதிவு சான்று அல்லது உரிமம் பெறவேண்டும். ஏற்கெனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் அது காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் 7000 உணவு வணிகர்களுக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டில் உணவுப்பொருள்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு 234 உரிமமும் 1,749 பதிவு சான்றிதழும்  மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. கலப்பட உணவுப்பொருள்கள் விற்பனை செய்ததாக 26 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.4,75,500 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு விற்பனையாளர்களும், மாணவ மாணவியரும் தங்களது  உணவுப்பொருள்கள் தொடர்பான புகார்களை 9444042322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு  கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ்அப்) தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நியமன அலுவலர் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவுப்பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை 04366-241034 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com