தமிழகம் முழுவதும் ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்: கோ. பழனிசாமி

இந்தியாவை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன், தமிழகம் முழுவதும் ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ள இப்பிரசாரம் இறுதியாக

இந்தியாவை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன், தமிழகம் முழுவதும் ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ள இப்பிரசாரம் இறுதியாக திருச்சியில் நிறைவடைகிறது என அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கோ. பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மதச்சார்பற்ற கொள்கையை பாதுகாக்க வேண்டும், மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும், மாட்டிறைச்சி, மாடு விற்பனைக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும், தாது மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தனியார் மயமாதலை தடுத்து அரசே நடத்த வேண்டும், விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே ராசிமணல், மேகதாதுவில் கர்நாடகமும், பாலாற்றில் ஆந்திரமும் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், கேரள நதி நீர் பிர்ச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், தென்னக நதி நீர் இணைப்பை உடனே நிறைவேற்ற வேண்டும், தமிழக விவசாயத்தை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு தனி காப்பீட்டுத் திட்டம் மற்றும் வேலையில்லா காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை 6 பிரசாரக் குழுக்கள் புறப்பட உள்ளன.
அதன்படி, கடலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் தொடங்கும் பிரசாரம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக திருச்சியில் ஜூலை 5-ஆம் தேதி நிறைவடைகிறது. கன்னியாகுமரியில் கோ. பழனிச்சாமி தலைமையில் புறப்படும் பிரசார இயக்கத்தை, கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தொடங்கி
வைக்கிறார்.
திருநெல்வேலியில் மூத்த தலைவர் தா. பாண்டியன் பங்கேற்க உள்ளார். அந்த பிரசாரக் குழு தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியாக திருச்சியை வந்தடையும்.
மாநில செயலர் இரா. முத்தரசன் தலைமையில் கடலூரில் தொடங்கி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் வழியாக திருச்சிக்கும், மாநில துணைச் செயலர் கே. சுப்பராயன் தலைமையிலான குழு நீலகிரியில் தொடங்கி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், வழியாக திருச்சிக்கும்,
மாநில துணைச் செயலர் மு. வீரபாண்டியன் தலைமையிலான குழு தேனியில் தொடங்கி திண்டுக்கல், விருதுநகர், மதுரை வழியாக திருச்சிக்கும், மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன் தலைமையிலான குழு கிருஷ்ணகிரியில் தொடங்கி தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக திருச்சிக்கும், ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலர் டி.எம். மூர்த்தி தலைமையிலான குழு திருவள்ளூரில் தொடங்கி வடசென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் வழியாக திருச்சியையும் வந்தடைந்து ஜூலை 5 -இல் பிரசார விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com