குடவாசல் வட்டத்தில் 2 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் பல்லவநத்தம், திருவீழிமிழலை அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் பல்லவநத்தம், திருவீழிமிழலை அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில் பல்லவநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி முதல்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. 1963-ஆம் ஆண்டு ஆரம்ப பள்ளியாக இருந்த பல்லவநத்தம் பள்ளி, 1987-ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 1997-இல் இருந்து உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டுவருகிறது.  6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் தற்போது 159 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.  குடவாசல் வட்டத்தில் உள்ள அதம்பார், நெம்மேலி, அதம்பார்படுகை, வெள்ளை அதம்பார், கடகம்பாடி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் சைக்கிள்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
100 சதவீத தேர்ச்சி குறித்து இப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) அன்பரசன் கூறியது: கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சிப் பெற வேண்டும் என கடுமையாக உழைத்தோம். இதன் பயனாக கடந்த 2015-ஆம் ஆண்டு 98 சதவீத தேர்ச்சி பெற்றோம். தொடர்ந்து,  பள்ளி மாணவ, மாணவியரின் முயற்சியாலும், ஆசிரியர்களின் பயிற்சியாலும் நிகழாண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  அதுமட்டுமின்றி 7 மாணவ, மாணவியர் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர் என்றார்.
434 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜெயசுந்தரி கூறியது: எங்களது முயற்சி இருந்தாலும், பள்ளி நாள்களில் காலையில் கணித பாடமும், மாலையில் மற்ற அனைத்துப் பாடங்களுக்கும் சிறப்பு வகுப்பு எடுத்து ஆசிரியர்கள் எங்களை ஊக்குவித்ததால் இந்த சாதனையை படைத்துள்ளோம் என்றார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் பிண்ணியர் ஆகப் பெறின் என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப எங்களாலும் முடியும் என்று அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்து
காட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com