கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில், ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடியக்கமங்கலத்தில் 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை தொடர் முழக்கப்

திருவாரூர் மாவட்டத்தில், ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடியக்கமங்கலத்தில் 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு எடுக்கப்படும் கச்சா எண்ணெய் நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் வேறிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு, நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் சேதமடையும்போது கச்சா எண்ணெய் விளை நிலங்களில் பரவுவதாகவும், இதனால் சாகுபடி பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து, கச்சா எண்ணெய் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அடியக்கமங்கலம், கருப்பூர், கள்ளுக்குடி, ஆண்டிப்பாளையம், அலிவலம், சேமங்கலம் ஆகிய 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அடியக்கமங்கலம் கடைவீதியில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமன் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், கச்சா எண்ணெய் கொண்டு செல்ல குழாய் பதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com