நாகை, மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ரயில் மறியல்: 125 பேர் கைது

நாகப்பட்டினம் மற்றும் மன்னார்குடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மற்றும் மன்னார்குடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும். மேகேதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15 முதல் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினத்தில் புத்தூர் ரவுண்டானா அருகே  ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒன்று கூடிய போராட்டக்குழுவினர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடியே, புத்தூர் ரயில் பாதை வரை பேரணியாக சென்றனர். அங்கு எர்ணாகுளம் விரைவு வண்டியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலர் தனபாலன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
மன்னார்குடியில் 65 பேர் கைது: இதேபோல் காவிரி உரிமை மீட்புக்குழுவினர், மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சென்ற மயிலாடுதுறை பயணிகள் ரயிலை குருவைமொழி என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா.பாரதிசெல்வன் தலைமை வகித்தார்.
தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட நிர்வாகிகள் தை. செயபால், பழனி.குமார், ராஜ.ராஜசேகர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி போலீஸார், ரயில் மறியலில் ஈடுபட்ட 65 பேரை கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com