நெல் நாற்றங்காலில் வேளாண்மை விஞ்ஞானி ஆய்வு

திருவாரூர் வட்டாரத்திலுள்ள பள்ளிவாரமங்கலம், பழையவலம் கிராமங்களில் தற்போது விதைக்கப்பட்டுள்ள நெல் நாற்றங்காலில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

திருவாரூர் வட்டாரத்திலுள்ள பள்ளிவாரமங்கலம், பழையவலம் கிராமங்களில் தற்போது விதைக்கப்பட்டுள்ள நெல் நாற்றங்காலில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ஆ. பாஸ்கரன்,  பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜா. ரமேஷ் மற்றும் திருவாரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  உதயகுமார் ஆகியோர் மேற்கொண்டனர்.
இதுகுறித்து பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜா. ரமேஷ் கூறியது: வெட்டுப்புழுக்கள் என்றழைக்கப்படும் படைப்புழுக்களானது இளம் பருவத்தில் வெளிர் பச்சை நிறத்திலும், மேல்புறம்,  பக்கவாட்டில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற கோடுகளுடன் காணப்படும். பின்னர், அவை அரை வட்ட வடிவமாக அடர் பழுப்பு அல்லது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் பக்கவாட்டில் கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். வெட்டுப்புழுக்களானது நாற்றுகளையே அதிக அளவில் வெட்டி சேதத்தை உண்டு பண்ணும்.
வெட்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்போது உண்டாகும் சேதமானது மாடு புல் மேய்ந்த நிலம்போல் காணப்படும். பகல் நேரங்களில் மறைந்திருக்கும் புழுக்களானது இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக இலைகளை கடித்து உண்ணும்.
பிறகு அருகாமையிலுள்ள வயல்களுக்குச் சென்று தாக்கும்.  வடிகால் வசதியில்லாத நாற்றங்காலில் இவற்றின் பாதிப்பு மிக அதிகமாகக் காணப்படும்.
வயலில் நீரைத் தேக்கி வைப்பதன்மூலம், புழுக்கள் பயிரின் மேல் புறத்துக்கு வரும்போது பறவைகளால் கொத்தி தின்று அழிக்கப்படும்.  வாத்துகளை வயலில் விடும்போது அவை புழுக்களை தின்று அழித்துவிடும். மண்ணெண்ணெய்யை மணலுடன் கலந்து வயலில் தெளிப்பதால் புழுக்கள் மூச்சு முட்டி இறந்துவிடும்.
ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துவதால் ஒரு ஏக்கர் நாற்றங்காலுக்கு தண்ணீரை வடித்தப் பிறகு குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. என்ற பூச்சிக்கொல்லி மருந்தை 80 மில்லி என்ற அளவிலும், நடவு வயலுக்கு 500 மில்லி  என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்றார்.
வேளாண்மை உதவி அலுவலர். சந்தோஷ்குமார் மற்றும் கிராம விவசாயிகள்  ஆகியோர் வயல் ஆய்வின்போது உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com