விபத்தில் மீன் வியாபாரி பலி: வேன் ஓட்டுநரைக் கண்டித்து சாலை மறியல்

நாகை மாவட்டம், கீழையூரில் நேரிட்ட  சாலை விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்தது குறித்து தகவல் தெரிவிக்காத வேன் ஓட்டுநர் மீது நடவடிக்கை

நாகை மாவட்டம், கீழையூரில் நேரிட்ட  சாலை விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்தது குறித்து தகவல் தெரிவிக்காத வேன் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீன் வியாபாரியின் உறவினர்கள் திங்கள்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள சிறுபட்டாக்கரையைச் சேர்ந்தவர் விட்டல்ராஜ் (50). மீன் வியாபாரி. இவர் உள்ளிட்ட சில மீன் வியாபாரிகள் மீன் கொள்முதல் செய்வதற்காக ஒரு வேனில் நாகைக்கு கடந்த அக். 29-ஆம் தேதி சென்றனர். இந்த வேன் கிழக்கு கடற்கரை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், விட்டல்ராஜ் நிலை குறித்து தெரியவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
 இந்த விபத்து குறித்து கீழையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள கழிவுநீர் குழாயில்  நவ.12-ஆம் தேதி விட்டல்ராஜ் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இந்நிலையில், விபத்தில் காணாமல் போனவர் குறித்து உரிய தகவல் தெரிவிக்காத வேன் ஓட்டுநர் யூசுப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் விட்டல்ராஜ் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ்  மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியலை விலக்கிக் கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com