நீடாமங்கலம் நகரில் வளர்ச்சிப் பணிகள் மேம்படுத்தப்படுமா?

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகரில் நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற மத்திய, மாநில

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகரில் நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீடாமங்கலம் நகரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளன. தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், ரயில்வே சந்திப்பு நிலையமும் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மத்திய அரசின் தபால் துறைக்குச் சொந்தமான இடம் நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரத்தில் இருந்தும், பல ஆண்டுகளாக அத்துறையால் சொந்த கட்டடம் கட்ட இயலாத சூழ்நிலையில் தெற்கு வீதியில் உள்ள வாடகைக் கட்டடத்தில் தபால் நிலையம் இயங்கி வருகிறது.
இதேபோல், நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல மாநில அரசு அலுவலகங்களும் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
ரயில் போக்குவரத்து : நாள்தோறும் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் தஞ்சாவூர், திருச்சி, எர்ணாகுளம் போன்ற ஊர்களுக்குச் சென்று வருகின்றன.
மன்னார்குடியிலிருந்து நாள்தோறும் மன்னார்குடி நீடாமங்கலம் வழியாக  மானாமதுரை  பயணிகள் ரயில், மன்னார்குடி மயிலாடுதுறை பயணிகள் ரயில், மன்னார்குடி - சென்னை மன்னை விரைவு ரயில், மன்னார்குடி கோவை செம்மொழி விரைவு ரயில் இவை தவிர மன்னார்குடி - நீடாமங்கலம் வழியாக வாராந்திர திருப்பதி விரைவு ரயில், வாராந்திர ஜோத்பூர் விரைவு ரயில் ஆகியவை இயங்கி வருகின்றன. இவை தவிர சரக்கு ரயில்களும் நீடாமங்கலம் வழியாகச் சென்று வருகின்றன.
சாலைப் போக்குவரத்து: இதேபோல் கேரளம், கர்நாடகம்  போன்ற மாநிலங்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் போன்ற ஊர்களுக்கு நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் கார்கள், வேன்கள், பேருந்துகள், இதர கனரக வாகனங்கள் ஏராளமாகச்  சென்று வருகின்றன. மேலும், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி , மன்னார்குடி , நீடாமங்கலம் ,  வலங்கைமான் வழியாக நாள்தோறும் ஏராளமான கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் இதர கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து நெருக்கடி:
இந்நிலையில், நாள்தோறும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் செல்லும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 7 மணி நேரம் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, நெடுஞ்சாலைப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டிருக்கும்போது பேருந்து பயணிகள் நவீன கழிப்பறை வசதி கூட இல்லாத நீடாமங்கலத்தில் படும் அவதி சொல்லி மாளாது. இது ஒருபுறம் இருப்பினும், நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக உள்ளூரில் வசிப்பவர்கள்கூட கடைவீதிக்குச் சென்று வர படும் அவதி பெரும்பாடாகவே உள்ளது.
இத்தகைய சூழலைப் போக்கிட பல ஆண்டுகளாக பொதுமக்கள் சார்பில் அவ்வப்போது சுட்டிக் காட்டப்பட்டதன் காரணமாக திருச்சி முதல் தஞ்சாவூர்,  நீடாமங்கலம் அருகில் உள்ள பகுதி வழியாக நான்கு வழிச்சாலைத் திட்டம் கடந்த கால மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தஞ்சாவூர் வரையில் நான்கு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக அந்த நான்கு வழிச்சாலைத் திட்டமும்  தற்போது தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் வரை இருவழிச்சாலைத் திட்டமாக முதலில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டப் பணிகளும் தற்போது துரிதப்படுத்தப்பட  வேண்டிய நிலை உள்ளது. இந்த திட்டம் தவிர நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயில்வே மேம்பாலம் திட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கும் மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்து மண் ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அளித்துள்ள தடை மனுவின் காரணமாக நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலைகளைப் போக்கி, நீடாமங்கலம் நகரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதிகளும், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com