மன்னார்குடி பகுதியில் அமைச்சர் ஆய்வு

வடகிழக்குப் பருவ மழையை தொடர்ந்து, மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக உணவுத்துறை

வடகிழக்குப் பருவ மழையை தொடர்ந்து, மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையிலான அரசுத்துறை அதிகாரிகள் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, காவிரி டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர் பகுதிகளில் பொதுப் பணித்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு அறிக்கை தர தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் கணிப்பாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்துக்கான குழுவில் தமிழக உணவுத்துறை ஆர். காமராஜ், மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், சமூக நலத் துறையின் முதன்மைச் செயலருமான மணிவாசகம், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வு குழுவினர் புதன்கிழமை மன்னார்குடியை அடுத்த அசேசம், துளசேந்திரபுரம், பரசபுரம், ராஜகோபாலபுரம், தென்பரை சோத்திரியம், திருக்களார் ஆகிய பகுதிகளில் மழைநீரால் பாதிக்கப்பட்ட நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட சம்பா சாகுபடி வயல்களைப் பார்வையிட்டு சேதங்கள், குறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். தென்பரையில் கால்நடைத் துறையின் சார்பில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமை  அமைச்சர் தொடங்கி வைத்து, கால்நடைகளுக்கு குடற்புழு, கலவை மருந்து ஆகியவற்றை புகட்டினார்.
சோத்திரியத்தில் பாமணியாற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணியைப் பார்வையிட்டு, பாசன வாய்க்கால்களின் மதகுகளை சீரமைக்குமாறு பொதுப் பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் சூழ்ந்திருந்த மழை நீர் பெரும் அளவு வடிந்து விட்டது. பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. 10 ஒன்றியங்களில் 520 சிறப்பு முகாம்கள் அமைத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 130 கால்நடை மருத்துவ முகாம் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.
இம் மாவட்டத்தில் மட்டும் 225 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆசிய வங்கி உதவியுடன் அடப்பாறு, அரிச்சந்திரா ஆறு ஆகியவை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.
ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், மாவட்ட திட்ட இயக்குநர் தியாகராஜன், ஊராட்சி உதவி இயக்குநர் ராஜசேகர், வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைச் செல்வம், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருத்துறைப்பூண்டி,  முத்துப்பேட்டை பகுதியில்...
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர். காமராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், கீழப்பெருமழை ஆகிய கிராமங்களில் சம்பா சாகுபடி செய்துள்ள வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர், கடுவெளி, மாங்குடி, திருக்களார் ஆகிய கிராமங்களில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் க. மணிவாசன், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com