மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மன்னார்குடியில் செயல்பட்டு வரும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்த ஆட்சியர், மருத்துவமனையில்  உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து,  அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜெ. அசோகனிடம், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்தும், சிகிச்சை முடிந்து பூர்ண நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தையும் ஆட்சியர் கேட்டறிந்தார்.
தற்போது மருத்துவமனையில் 31 ஆண்கள், 28 பெண்கள், 15 குழந்தைகள் சிகிச்சை பெறு வருவதாகவும், இதுவரை டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் ஒருவர் வீடு திரும்பியதாகவும், ஒருவர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவர் மட்டும் மருத்துவனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தலைமை மருத்துவர் ஜெ. அசோகன் விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் கலந்துகொண்டு, டெங்கு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து, மன்னார்குடி பேருந்து நிலையத்தில் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நிலவேம்பு குடிநீரை ஆட்சியர் வழங்கினார். கீழசெங்குந்த முதலியார் தெருவில் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் சார்பில் நடைபெற்று வரும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணியையும் ஆட்சியர்  பார்வையிட்டார்.
ஆய்வின்போது, சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், மன்னார்குடி கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி, வட்டாட்சியர் தேவி சீனிவாசன், நகராட்சி ஆணையர் ஆர். இளங்கோவன், ஒன்றிய ஆணையர்கள் ஞா. கமலராஜ், எஸ். சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com