அரசு வேளாண்மை விற்பனை நிலையங்கள் விடுமுறை நாள்களிலும் இயங்க வேண்டும்: எம்எல்ஏ ப. ஆடலரசன்

அரசு வேளாண் விற்பனை மையங்கள் விடுமுறை நாள்களிலும் இயங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருத்துறைப்பூண்டி

அரசு வேளாண் விற்பனை மையங்கள் விடுமுறை நாள்களிலும் இயங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் செயலற்ற நடவடிக்கைகளால் டெல்டா பகுதியில் விவசாயம் முற்றிலும் முடக்கப்பட்டதால்,  தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். 2011-15 ஆட்சியின்போது இருந்த அதே நிலை 2016-17 களிலும்  தொடர்வது விவசாயிகளையும் விவசாயத்தையும்  இந்த ஆட்சியாளர்கள் முற்றிலும் மறந்து விட்ட போக்கைத்தான் காட்டுகிறது. திருத்துறைப்பூண்டி தொகுதியைப் பொருத்தவரை சுமார்  7,200 ஹெக்டேருக்கும் மேலான விவசாய நிலங்கள் சாகுபடிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அரசு வேளாண்மை மையங்கள் மூலம் வழங்கப்பட்ட ( ஏடிடி 16  எனும் விதை) நெல் ரகம் 30 கிலோ மூட்டையில் குறைந்தபட்சம் அரை கிலோவுக்கும் மேலாக அரிசியாக இருந்தது. மேலும் 15 கிலோ தரமற்ற விதையாக இருந்தது. வேளாண் மையங்களில் உரங்கள் இருப்பு வைக்கப்படுவதில்லை. குறிப்பாக, சிங்க் சல்பேட் உரமானது 15 நாள் பயிருக்கு கொடுக்கப்பட வேண்டிய உரமாகும்.  அதேபோல், முக்கிய உரமான யூரியாவும் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை.
வேளாண் விற்பனை நிலையங்களை சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் விடுமுறையாக அறிவித்து மூடிவிடுவதால்,  விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 5 நாள்களில் தங்களது தேவைகளுக்கு ஏற்ப விவசாய இடுபொருள்களை வாங்கி வைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
ஆகவே அரசு இனிவரும் 4 மாதங்களுக்காவது வேளாண் விற்பனை நிலையங்களை, பொது விநியோக அங்கடிகளைப்போல சனி ஞாயிறு தினங்களிலும் திறந்துவைத்து விற்பனை செய்ய வழி செய்து உடனடியாக  அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
அதேபோல், நேரடி விதைப்புக்கு தேவைப்படும் தரமான விதைகள், காலத்தோடு கொடுக்கப்பட வேண்டிய உரம், களைக்கொல்லி உள்ளிட்டவைகளை போதுமான அளவு இருப்பு வைக்க நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும்.
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு, முளைத்திருக்கும் பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளி பூச்சிகளை அழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அணையில் திறந்துவிடப்பட்டிருக்கும் நீரை கடைக்கோடி பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திறந்துவிட நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com