நெற்பயிரில் வெட்டுக்கிளி தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்: நெல் ஜெயராமன்

நேரடி விதைப்பின் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரை வெட்டுக்கிளி சேதப்படுத்துவதை இயற்கை முறையில் தடுக்கலாம் என தமிழக

நேரடி விதைப்பின் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரை வெட்டுக்கிளி சேதப்படுத்துவதை இயற்கை முறையில் தடுக்கலாம் என தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நெல் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: சம்பா சாகுபடிக்கான பருவமும் மாறி, தாளடி சாகுபடி நேரத்தில் ஒரு போக சாகுபடியை தொடங்கியுள்ள வேளையில், டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெய்த மழையில் விதை முளைத்துவரும் நிலையில், எதிர்பாராத விதமாக வெட்டுக்கிளி பெருமளவில் உற்பத்தி ஆகியுள்ளது. இது வயல்களில் படைப்படையாக சென்று, சுமார் 5 நாளிலிருந்து 10 நாள்கள் வரையிலான நெற்பயிரை தரை மட்டத்துக்கு வெட்டி விடுகின்றன. இதனால், மீண்டும் விதைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து இயற்கை முறையில் பயிர்களைப் பாதுகாக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ பச்சை மிளகாய், கால் கிலோ பூண்டு, கால் கிலோ இஞ்சி இவைகளை விழுதாக அரைத்து அதில் நூறு கிராம் புகையிலை சேர்த்து 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இந்த கலவையை அடுப்பில் வைத்து 5 லிட்டராக வற்றும் வரை சூடாக்க வேண்டும்.
 பின்னர், ஆற வைத்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் வீதம் இந்த கலவையைப் பயன்படுத்த வேண்டும்.  இந்த கலவையுடன் கூடுதலாக தனியே 2 லிட்டர் தண்ணீரில் அரை பாதி காதி சோப்பு கரைத்து அதில் 100 மில்லி வேப்ப எண்ணெய் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
 ஏற்கெனவே உள்ள இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசலை 10 லிட்டர் டேங்கில் 500 மில்லியும், வேப்ப எண்ணெய் சோப்பு கரைசல் 100 மில்லியும் ஊற்றி கைத்தெளிப்பான் மூலம் காலை 11 மணிக்கு முன்பாகவும், மாலை 3 மணிக்கு முன்பாகவும் தெளிக்க வேண்டும்.
  இவ்வாறு தெளிப்பதன் மூலம் வெட்டுக்கிளி தாக்குதலை தடுக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை எதிரில் உள்ள இயற்கை வேளாண் தகவல் மையத்தை நேரடியாகவோ அல்லது 04369 - 220954 என்ற தொலைபேசி எண்ணிலோ 94433 30954 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com