பண்டிகை கால கலப்பட பலகாரங்களை தடுக்க 9 குழுக்கள் அமைப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமற்ற மற்றும் கலப்படமான பலகாரங்கள் விற்பனை செய்யப்படுவதை  தடுக்க திருவாரூர் மாவட்டத்தில் 9 குழுக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமற்ற மற்றும் கலப்படமான பலகாரங்கள் விற்பனை செய்யப்படுவதை  தடுக்க திருவாரூர் மாவட்டத்தில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் மருத்துவர் கோ.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கலப்பட மற்றும் தரமற்ற பலகாரங்கள் தயாரிப்பு, விற்பனையை தடுக்க, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இப்பணிக்காக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் உணவகங்கள் மற்றும் தீபாவளி பலகாரம் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்வார்கள்.
ஆய்வின்போது, உணவு மாதிரி எடுக்கவும், சந்தேகப்படும் பொருள்களை உடனடியாக பறிமுதல் செய்யவும் இக்குழுவினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள், உணவுப் பாதுகாப்புத் துறை அனுமதி பெற்று மட்டுமே, தரமான மூலப் பொருள்களைக் கொண்டு, சுகாதாரமான இடத்தில் பலகாரங்கள் தயார் செய்ய வேண்டும்.
உடல் நலக் குறைபாடு, தோல் நோய் உள்ளவர்கள் இப்பணியில் ஈடுபடக்கூடாது. வளையல், மோதிரம் போன்ற ஆபரணங்கள் அணிந்துகொண்டு பலகாரம் தயாரிக்கக் கூடாது. காரவகைகளில் செயற்கை வண்ணம் பயன்படுத்தக் கூடாது. இனிப்பு வகையில் மட்டும் ஒரு வண்ணம் என்றால் 100 மி.கி., ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணம் என்றால் 200 மி.கி. அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பலகாரம் செய்ய பயன்படுத்த வேண்டும். அதுவும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட பலகாரம் என்பதை குறிப்பிட்டு விற்பனை  செய்யவேண்டும். சூரிய ஒளி  பலகாரங்களின் மீது விழாதவாறு  விற்பனைக்கு  வைக்கவேண்டும்.
 இந்த விதிமுறைகளை மீறும் பலகாரங்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com