காவிரி: ஏப்.25 முதல் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம்: பி.ஆர். பாண்டியன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஏப்.25 முதல் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் நடைபெற உள்ளதா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஏப்.25 முதல் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் நடைபெற உள்ளதாக தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். 
திருவாரூரில் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில அளவிலான அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் எம். கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில், மாநிலத் தலைவர் த. புண்ணியமூர்த்தி, துணைச் செயலர்கள் எம். மணி, ஜி. வரதராஜன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சோம. தமிழார்வன் மற்றும் மாவட்டச் செயலர்கள் பங்கேற்றனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியது: காவிரி பிரச்னையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், கர்நாடகத்துக்குச் சாதகமாக காவிரிப் பிரச்னையை அணுகுவோம் என பாஜகவைச் சேர்ந்த முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானது. தேர்தல் நடத்தை விதிமீறலின்படி, அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பைப் பின்பற்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்க வலியுறுத்தி, இருசக்கர வாகனப் பிரசாரப் பயணப் பேரணியானது, ஏப். 25-இல் தொடங்குகிறது. 
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நினைவுத் தூணில் தொடங்கும் பரப்புரை பயணம் நாகை, திருவாரூர், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் வழியாகச் சென்னையை அடைகிறது. இதைத்தொடர்ந்து, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால்  வழியாக திருவாரூர் மனுநீதிச் சோழனிடம் (சிலை) நீதி கேட்டு ஏப்.29-இல் பயணம் நிறைவு பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com