கிராமங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வர வேண்டும்

மருத்துவப் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமங்களில் பணியாற்ற முன் வரவேண்டும் என்றார்

மருத்துவப் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமங்களில் பணியாற்ற முன் வரவேண்டும் என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். கீதாலெட்சுமி. 
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 3-ஆவது பட்டமளிப்பு விழாவில், 96 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி அவர் ஆற்றிய பட்டமளிப்பு உரை: மருத்துவப் பட்டம் பெறுவது மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் பொருளாதார நிலையை தவிர்த்து,  நீங்கள் படிக்கக் கூடிய சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள் என்பதை உணர வேண்டும். 
கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் முன்வர வேண்டும். மருத்துவர்கள் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். கிராமப்புறங்களில் மருத்துவர்கள் குறைவான அளவில் இருப்பதாலேயே, மருத்துவம் படிக்காத பலர் நோய்களுக்கான ஆலோசனைகளில் ஈடுபடுகின்றனர். எனவே,  3 ஆண்டுகள் கிராமப்புற மக்களிடையே பணியாற்ற வேண்டும். தற்போது, ஏராளமான கார்பரேட் மருத்துவமனைகள் உருவாகின்றன. அவைகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றன. 
மருத்துவ மாணவர்களுக்கு மேல்படிப்பு, அரசு துறை, வெளிநாட்டு பணி என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவைகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயோ எத்திக்ஸ் என்ற துறை ஏற்படுத்தப்பட்டு, மருத்துவர்களுக்கான நீதிகளும் நெறிமுறைகளும் அதில் கற்பிக்கப்படுகிறது என்றார் கீதாலெட்சுமி. 
 விழாவில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்து பேசியது: மருத்துவ மாணவர்கள் தங்கள் சுகம், மகிழ்ச்சி ஆகியவற்றை தியாகம் செய்து படித்து பட்டம் பெறுகின்றனர். பட்டம் பெறும் மாணவர்களை பிறரோடு ஒப்பிடாதீர்கள். மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் இடையே நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார் அவர். 
பட்டம் பெற்ற மாணவர்கள் மருத்துவத் தொழிலில் நெறிமுறைகளுக்கான ஹிப்போகிரட்டிஸ் உறுதிமொழி ஏற்றனர். விழாவில், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகப் பதிவாளர் பாலசுப்ரமணியன்,  திருவாரூர் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ராஜா, துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், விடுதிக் காப்பாளர்கள் சிவக்குமார், வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com